பெருமளவு கேரளா கஞ்சாவை கைப்பற்றிய கடற்படையினர்: ஒருவர் கைது (Photos)
யாழ்ப்பாண கடற்பரப்பில் சுமார் 492 கிலோகிராம் கேரளா கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது படகில் 15 சாக்குகளில் 225 பொதிகளில் சுமார் 492 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து படகோட்டியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் பெறுமதி 123மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகினையும், கைது செய்யப்பட்ட இளைஞனையும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சந்தேகநபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.







