இலங்கையிலிருந்து மேலும் பலர் தமிழகத்தில் தஞ்சம் (Video)
இலங்கையிலிருந்து 4 கைக்குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த 16 பேர் தனுஷ்கோடிக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அன்றாட அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை கிடுகிடு என உயர்ந்து மக்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக இலங்கையில் உள்ள பொதுமக்கள் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து கடந்த மாதத்திலிருந்து 16 குடும்பத்தைச் சேர்ந்த 75 நபர்கள் தனுஷ்கோடி பகுதிக்குத் தஞ்சமடைந்ததை அடுத்து, அவர்கள் உரிய விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மேலும் இலங்கையிலிருந்து 4 கைக்குழந்தை உட்பட 5 குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தனுஷ்கோடி அடுத்த இரட்டை தலைப்பகுதியில் ஆபத்தான முறையில் கடல் கடந்து வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் குழுமம் பொலிஸார் மற்றும் கியூ பிரிவு பொலிஸார் உரிய விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் கடலோர காவல் குழுமம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.