வடக்கு கிழக்கில் இரகசியமாகக் கபளீகரம் செய்யப்படும் பல ஏக்கர் நிலங்கள்
வடகிழக்கில் பொது மக்களது காணிகளை அபகரிப்பு செய்வதென்பது சர்வசாதாரணமாகிவிட்டது.
அப்பாவி மக்கள் தங்களது ஜீவனாம்ச தொழில்களாக நெற் செய்கை விவசாயம், மேட்டு நிலப் பயிர்ச் செய்கை என மேற்கொண்டிருந்த போதிலும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய அரசாங்க தரப்பு நிறுவனங்கள் கையகப்படுத்த முனைகின்றனர்.
குறிப்பாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தமிழ் முஸ்லீம் மக்களது காணிகளே ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.
இவ்வாறான நிலையில் தனியார் நிலங்களை கபளீகரம் செய்து தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்க முற்படுகின்றனர் .
இவ்வாறான நிலையில் திருகோணமலை மாவட்ட பட்டினமும் சூழலும் பிரதேச செயல பகுதியில் உள்ள முத்து நகர் கிராம மக்களும் இதற்கு ஆளாகியுள்ளனர் இவ்வாறான நிலையில் 2025.05.22 ந் திகதி அன்று திருகோணமலை துறை முக அதிகார சபையினர் தங்களது அடாவடித் தனத்தை காட்டியுள்ளனர்.
இலங்கை துறைமுக அதிகாரசபை
இதன் பிரகாரம் குறித்த பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 25 பேருக்கு பிஸ்கால் சமர்ப்பிக்கப்பட்டு வெளியேற்றும் நடவடிக்கை இடம்பெற்றது.
திருகோணமலை உப்புவெளி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட முத்துநகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள தகரவெட்டுவான் விவசாய சம்மேளனத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் 25 பேரை வெளியேற்றும் நடவடிக்கை திருகோணமலை நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைய நீதிமன்ற பதிவாளரினால் முன்னெடுக்கபட்டது.
இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் குறித்த விவசாயிகளுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்குத் தீர்ப்பின் பிரகாரம் குறித்த விவசாயிகள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
குறித்த இடத்திற்கு துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர்களுடன் அப்பகுதியில் சோலார் திட்டத்தை மேற்கொள்ளவுள்ள நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த பகுதியில் 1980 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே தாம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்நிலையில் 1984ஆம் காலப்பகுதியில் அமைச்சரவையின் அனுமதி இன்றி குறித்த காணிகள் இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் குறித்த காணிகளை இந்திய சோலார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளனர்.
இதனால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எம்மை வெளியேற்றி அக்காணிகளை சோலார் திட்டத்திற்காக வழங்க உள்ளனர்.
இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் முறையிட்டும் எவ்வித ஆக்கபூர்வமான பதில்களும் எமக்கு வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் .
மேட்டு நிலப் பயிர்ச் செய்கை
இலங்கை துறை முக அதிகார சபையினர் தொடர்ந்தும் தங்களது காணிகளுக்குள் வந்து எந்தவித கட்டிடங்களோ பயிர்ச் செய்கை நடவடிக்கைகளோ மேற்கொள்ள முடியாத அளவுக்கு தங்களை அச்சுறுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் சுமார் 1600க்கும் மேற்பட்ட நெற் செய்கை வயல்களும் 1200 விவசாயிகளும் வாழ்கின்றனர் ஐம்பது ஏக்கருக்கும் மேறுபட்ட மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்கான நிலங்களில் தங்களது வாழ்வாதாரங்களை அங்குள்ள சிறிய ரக ஐந்து குளங்களை நம்பி இருக்கின்றனர்.
இருந்த போதிலும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனியார் கம்பனிகளுக்காக நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு சோலார் பவர் திட்டத்துக்காக வழங்க எண்ணியுள்ளனர் இதனை தடுக்க திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் முன்பாக 2025.01.03 ந் திகதி அன்று வீதிப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
விவசாயத்தை நம்பி அப்பாவி ஏழை மக்களின் காணிகளை தாரை வார்குக முனைகின்றனர் பல போராட்டங்களை நடாத்திய போதிலும் நிரந்தரமான தீர்வில்லாமல் தவிக்கின்றனர்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் அமைதி காத்து வாக்குகளை சூறையாட நினைத்து தேர்தலின் பின் மீண்டும் நில அளவீட்டினை மேற்கொள்ளவும் மக்கள் பூமியை அந்நிய நாடுகளுக்காக தாரை வார்க்க முனைகின்றனர். இது போன்று சம்பூர் பகுதி மக்களின் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை சூரிய மின் உற்பத்திக்காக கபளீகரம் செய்துள்ளனர்.
இது குறித்து நில அளவையினை மேற்கொள்ள தனியார் சோலார் பவர் கம்பனிகளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்ட நேரத்தில் களத்தில் நின்று கருத்து தெரிவித்த அப்பகுதி தகரவெட்டுவான் விவசாய சம்மேளன உறுப்பினர் " இப்பகுதியில் மூன்று விவசாய சம்மேளனங்கள் உள்ளன.
இங்கு நாம் 1972 களில் இருந்து விவசாயம் செய்து வருகிறோம் ஆனாலும் 2023 ம் ஆண்டில் இருந்து துறை முக அதிகார சபைக்கு சொந்தமான காணி என்று எங்களை வெளியேறுமாறு கூறுகின்றனர்.
இவர்களுக்கான எந்தவித ஆதாரமும் இல்லை அப்போதைய துறை முக அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியால் வர்த்தமானியிடப்பட்டதை வைத்தே துரத்துகிறார்கள் நாங்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போதும் எங்களுக்கு எதிராக நில உடைமை மீட்பு சட்டத்தின் கீழ் வழக்கினை தாக்கல் செய்துள்ளார்கள்.
வனத்துறையின் செயற்பாடு
இருந்த போதிலும் தனியார் கம்பனிகளுக்கு எங்கள் காணிகளை வழங்க விடமாட்டோம் எவ்வளவோ காணிகள் இருக்கின்ற போதிலும் விவசாய காணிகளை இவர்கள் அபகரிக்க முற்படுகின்றனர் எனவே நிலத்தை மீட்டு தாருங்கள் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
இவ்வாறாக நில அபகரிப்புக்களை வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் , சுற்றுலா அதிகார சபை போன்ற நிறுவனங்களே அதிகமாக ஆதிக்கத்தை மக்கள் மத்தியில் காட்டி நிலங்களை சூறையாட நினைக்கின்றனர்.
இது குறித்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் நாடாளுமன்றின் உள்ளும் வெளியிலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த போதிலும் நிலையான தீர்வின்றி தொடர் நில மீட்பு போராடங்களாக மாறியுள்ளன.
வனத்துறையின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் சண்முகம் குகதாசன் நாடாளுமன்ற 22.05.2025 அன்றைய சபை அமர்வில் கலந்து கொண்டு கண்டணத்தை வெளியிட்டதுடன் மேலும் இவ்வாறு தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் சம்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 40 விவசாயிகளுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தையும் கிளிவெட்டி கிராமசேவகர் பிரிவில் 37 விவசாயிகளுக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலத்தையும் பாரதிபுரம் கிராமசேவகர் பிரிவில் 45 விவசாயிகளுக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தையும், ஆசாத்நகர் கிராமசேவகர் பிரிவில் 70 விவசாயிகளுக்கு சொந்தமான 148 ஏக்கர் நிலத்தையும் தோப்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 60 விவசாயிகளுக்கு சொந்தமான 93 ஏக்கர் நிலத்தையும் என ஆக மொத்தம் 252 விவசாயிகளுக்கு சொந்தமான 693 ஏக்கர் நிலத்தை வனத்துறையானது தனது எல்லைக் கற்களை இட்டு பிடித்து வருவதோடு விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் தடுத்தும் வருகின்றது.
இதைப் போலவே சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தங்கநகர் கிராம சேவையாளர் பிரிவிலும் 85 விவசாயிகளுக்கு சொந்தமான 145 ஏக்கர் நிலத்தை எல்லைக் கற்களை போட்டு பிடித்துள்ளது. வனத்துறையின் இந்த செயற்பாட்டை உடன் நிறுத்த ஆவன செய்யுமாறு துறைசார் அமைச்சரைக் கேட்டுகொள்கிறேன்.
திருகோணமலை மாவட்டத்தில் நில வன்கவர்வு என்பது இப்பொழுது தோன்றிய பிரச்சனை அல்ல. 1983 ஆண்டு தொடக்கம் 2009 ஆண்டு வரை போர் நிலவிய காலத்தில் மக்கள் இடம் பெயர்ந்தனர்.
திருகோணமலை மாவட்டம்
அவ்வேளையில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த நிலங்களை வனத்துறையும் ,வனவிலங்குத் துறையும் எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துள்ளார்கள்.
எடுத்துக்கட்டாக திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் போர் காலத்திலே கைவிடப்பட்ட 205 சிறுகுளங்களையும் 25 அணைக் கட்டுகளையும் கொண்டமைந்த அண்ணளவாக 12000 ஏக்கர் நிலத்தை வனத்துறை எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துள்ளது .
இதன் மூலம் 24,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமல் போயுள்ளது . திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் பரப்பளவு 32,042 ஏக்கர் ஆகும்.
இதில் வனவிலங்குத் துறை 25,242 ஏக்கர் நிலத்தை தமக்கு உரியது எனவும் வனத் துறை 11,906 ஏக்கர் நிலத்தை தமக்கு உரியது எனவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
மொத்தம் 32,042 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கொண்ட வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் எப்படி 37,148 ஏக்கர் நிலத்தை கைபற்றினார்கள்? இப்படியான திறமை இந்த நாட்டில் உள்ள வனத்துறை மற்றும் வனவிலங்குத் துறை அதிகாரிகளைத் தவிர உலகில் வேறு யாருக்கும் இருக்க முடியாது என மக்கள் கேலி செய்கின்றனர்.
அதேபோன்று திருகோணமலை மாவட்டதில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 29,430 ஏக்கர் நிலத்தை வனத்துறை கையகப்படுத்தி வைத்துள்ளது, மேலும் 28,372 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முனைகிறது. வனவிலங்குத் துறை 7,330 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது, தொல்பொருள் துறை 1,087 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது, புத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர்.
இதன் மூலம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 70,039 ஏக்கர் நிலம் நெல் உற்பத்தி செய்யாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு போகத்தில் 140,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி குறைக்கப்படுகின்றது.
மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களது ஆட்சிக்காலத்தின் பொழுது 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் நெற் செய்கைக்குப் பயன்படுத்திய நிலங்களை நெற்செய்கைக்கு விடுவிக்கும்படி அரச ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் இது வரையில் குறித்த ஆணை முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.
“ ஆசாரி விடை கொடுத்தாலும் பூசாரி விடை கொடுக்க மாட்டார்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
அரசாங்க முடிவு
அதேபோல அரசாங்கம் முடிவு செய்தாலும் அரச அதிகாரிகள் அதனைச் செயற்படுத்துவதாக இல்லை. இதன் மூலம் இவர்கள் நாட்டின் நெல் உற்பத்தியை அதிகரிக்க விடாமல் தடுத்து அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனரா? என எண்ணத் தோன்றுகிறது.
இதனை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல தொல்பொருள் துறையும் மக்கள் விவசாயம் செய்த நிலங்களை தமது எல்லைக் கற்களைப் போட்டுப் பிடித்து வைத்துக்கொண்டு, அதனுள் தொல்பொருள் சின்னங்களைக் கண்டுபிடிக்க முடியாமலும் அதேவேளை அதனுள் மக்களை விவசாயம் செய்ய விடாமலும் தடுத்து வருகின்றது.
எடுத்துக் காட்டாகத் திரியாய் கிராமத்தில் உள்ள ஏறத்தாள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தினைக் கையகப்படுத்தி எல்லைக் கற்களை போட்டு மூன்று/நான்கு ஆண்டுகளாக பிடித்து வைத்துள்ளனர் எனினும் அப் பகுதியில் எதுவித தொல்பொருள் சின்னங்களையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுடன் அந்த நிலத்தை மீள மக்களுக்கு விவசாயம் செய்ய வழங்கவும் மனம் இன்றி இருக்கின்றனர். இதனால் நெல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது.
முடிவாக திருகோணமலை மாவட்டத்திலே 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 118,710 ஏக்கர் நிலத்தை வனத் துறையினரும் 111,619 ஏக்கர் நிலத்தை வன விலங்குத் துறையினரும் 2,599 ஏக்கர் நிலத்தை தொல் பொருள் துறையினரும் பூஜா பூமி, பூஜாக் கொடை என்னும் பெயர்களில் ஏறத்தாழ 3,820 ஏக்கர் நிலத்தை புத்த பிக்குமாரும் ஆக மொத்தம் மக்கள் விவசாயம் செய்த 236,748 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் ஒரு போகத்தில் மட்டும் ஏறத்தாழ ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமல் போகின்றது.
இதை இந்த அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இதனை விடுவிப்பதன் மூலம் ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தியை அதிகரிக்க ஆவன செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என பேசியிருந்தார்.
அரசாங்கம் இதனை தடுத்க்க வேண்டும் எல்லை கற்களை விட்டு எங்களை வெளியேற்ற முயற்சிக்கும் துறை முக அதிகார சபையினருக்கு எதிராக நாங்களும் ஆறு வழக்குகளை தொடுத்துள்ளோம் எங்களுக்கான நீதியை பெற்றுத் தாருங்கள் என கோரிக்கை விடுக்கிறோம் என அப்பகுதி விவசாயி ஒருவர் மேற்டண்டவாறு தெரிவித்தார்.
எனவே தொடர்ச்சியான மக்கள் போராட்டத்துக்கு செவி சாய்க்காமல் உள்ள அநுர அரசாங்கம் தேர்தல் காலத்தில் மாத்திரம் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளுக்காக வடகிழக்கில் பல மேடைகளை போட்டு பல வாக்குறுதிகள் வழங்கிய போதிலும் தீர்வில்லாமல் தொடரும் நில அபகரிப்பு போராட்டத்தை எப்போது முடிவுக்கு கொண்டு வருவது என மக்கள் ஏங்கி நிற்கின்றனர்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 24 May, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
