தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம்! எச்சரிக்கை விடுக்கும் மனுஷ நாணயக்கார
வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக கூறி பணம் பெறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்பு பெற்று குறித்த நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதாக அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பணம் மீளப்பெற முடியாது
அவர் மேலும் கூறுகையில், “ வெளிநாடுகளுக்கு செல்வதற்கு எந்தவொரு தரகருக்கும் பணம் செலுத்த வேண்டாம். அந்த பணம் தொடர்பில் முறைப்பாடு செய்தால் கூட அதனை மீண்டும் பெற முடியாது.
அதிகமானோர் இந்த பணங்களை பெற்றுக்கொண்டு ஓடி விடுகின்றார்கள். வெளிநாடு செல்வதற்கு தற்போது அதிக கேள்வி காணப்படுகின்றது.
அதேபோன்று அவ்வாறு தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல.
குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்வதற்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் குறுக்கு வழியில் சீக்கிரம் செல்ல முடியும் என யாராவது கூறுவார்களாயின் அது முற்றிலும் பொய்யானது.
மோசடி செயற்பாடுகள்
பல்வேறு விடயங்களை கூறி பணம் கேட்பார்கள் அவை அனைத்தும் மோசடிகள். அவ்வாறான விடயங்கள் குறித்து முறைப்பாடு செய்யுங்கள்.
அவர்களுக்கான சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
விசேடமாக தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம். பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் அநாவசியமாக பணம் கேட்பார்களாயின் அது குறித்து முறையிடுங்கள்” என தெரிவித்துள்ளார்.