வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: குடிவரவு குடியகல்வு திணைக்களம்
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்றுவரை 1.5 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலட்சம் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்கிறார்கள்.
நாட்டில் வாழ முடியாத நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று உழைக்கவும், தஞ்சம் கோரவும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றார்கள்.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து சட்டப்படி கடவுச்சீட்டு மூலம் ஒன்றரை இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள். எனினும், முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் இந்த 1.5 இலட்சம் பேருக்குள் பதிவாக்கப்படவில்லை. விமானப்படையினரின் விமானம் முலமே அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள்
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரத்தின்படி 1 இலட்சத்து 767 பேர் தனித்தும், 55 ஆயிரத்து 411 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாகவும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதில் பெருமளவானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். கட்டாருக்கு 39 ஆயிரத்து 216 பேரும், சவுதிக்கு 3 219 பேரும், தென்கொரியாவிற்கு 2 576 பேரும் சென்றுள்ளார்கள். 46 ஆயிரத்து 992 பேர் தொழில் நிபுணத்துவத்துடன் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.
மேலும், 49 ஆயிரத்து 923 பேர் தொழில்களுக்காக சென்றுள்ளார்கள். 39 ஆயிரத்து 871 பேர் வீட்டுப்பணியாட்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்றும் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தயாராகி வருகின்ற நிலையில் கடவுச்சீட்டு எடுப்பதற்காகவும் காத்திருக்கின்றார்கள் .
கூலித்தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாத மக்கள் வெளிநாடுகளை நாடி செல்ல நேரிட்டுள்ளது. மேலும், அரசாங்கம் நாட்டிற்கு டொலர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரச உத்தியோகத்தர்களை வெளிநாடு சென்று வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது.
பலர் வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றதுடன், நாளாந்தம் கூலித்தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தப்பிச்செல்லல்
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முடியாத மக்கள் பலர் படகுகள் மூலம் நாட்டை விட்டு தப்பிசெல்ல முற்படுகிற இதேவேளை கடற்படையினரால் கைது செய்யவும் படுகிறார்கள்.
கடந்த ஏழு மாதங்களுக்குள் நூற்றுக்கு மேற்பட்ட இலங்கை மக்கள் படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சென்று தஞ்சம் புகுந்துள்ளனர்.
பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்! அமைச்சரவை சந்திப்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் |