வெள்ளவத்தையில் பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன்: மனோ கணேசன் வழங்கிய அறிவுறுத்தல்
வெள்ளவத்தையில் பொலிஸாரால் இளைஞன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாருக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி இனி பொலிஸ் சீருடை இல்லாமல் பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத்துடன் தொடர்பாடலில் ஈடுபடக்கூடாது எனவும், வெள்ளவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி சுபாஷ் காந்தவெலவிடம் திட்டவட்டமாக கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனது பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்குவதாக பொறுப்பதிகாரி காந்தவெல தனக்கு உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனவாத சொற்பிரயோகம்
வெள்ளவத்தை பொலிஸ் வலயத்தின் பசல்ஸ் ஒழுங்கை பகுதியில், இரகசிய சுற்றுவளைப்பு தேவைக்காக சீருடை அணியாமல் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அப்பகுதியில் சிவில் கடமைகளில் ஈடுபட்டிருந்த மகேஷ்வர குருக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைக்கு குருக்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டதுடன் சமூக முடிவுக்கு வந்துள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வாகன போக்குவரத்து தொடர்பில் ஏற்பட்ட சிறு பிணக்கை இனவாத சொற்பிரயோகம், வாக்குவாதம், உடல்ரீதியான பலவந்தம் வரை பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.
குருக்களின் புதல்வர் பலவந்தமாக சீருடை அணியாத பிரிவினரால் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இரு தரப்பும் சமாதான உடன்பாட்டுக்கு வந்து பிரச்சினை, நேற்று மாலையே முடிவுக்கு வந்துள்ளது.
குருக்களுடன் சற்றுமுன் உரையாடினேன். மத குருமார்களுக்கு உரிய பெருந்தன்மையுடன் பொலிஸாரை தான் மன்னித்து விட்டதாக என்னிடம் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |