நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய போதும் போராடியவர்கள் நாங்கள்! கடுமையாக வலியுறுத்திய மனோ கணேசன்
காலிமுகத்திடல் போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், போராட்டத்தை நாம் அங்கிருந்து கற்றோம் என நீங்கள் நினைக்க கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள் நாங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - பத்தரமுல்லை, இம்பீரியல் மொனார்ச் விடுதியில் இன்று “சீர்திருத்தத்திற்கான கூட்டு” என்ற சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஓமல்பே சோபித தேரர் உட்பட மதத்தலைவர்கள், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நாம் மதவாதத்தால், இனவாதத்தால், அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு இனம். இந்த அநீதிகளுக்கு எதிராக நாம், இன்று, நேற்று அல்ல, பல்லாண்டுகளாக போராடி வருகிறோம். நாம் எப்போதும் ஜனநாயக போராளிகள்தான்.
இலங்கை தொடர்பான அறிவிப்பு
அரசியலில் இருந்து மதம் அகற்றப்பட வேண்டும். இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். அதுவரை எம் ஜனநாயக போராட்டம் தொடரும். 225 பேர் கொண்ட நாடாளுமன்றம் என்ற சொற்பதம் இங்கே ஏற்பாட்டாளர்களினால் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.
அந்த கும்பலில் எங்களை போடாதீர்கள். இந்த கோட்டாபய அரசாங்கத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. நாம் எப்போதும் இந்த ராஜபக்சர்களை எதிர்த்தே வந்துள்ளோம். நாங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள்.
நீங்கள் சொல்லும் அந்த 225 பேர் வேறெங்கோ இருக்கிறார்களோ எனக்கு தெரியவில்லை. நான் அந்த கும்பலில் இல்லை என்பது எனக்கு தெரியும். நான் மக்களுடனேயே இருக்கிறேன். நான் கட்சி மாறி சோரம்போன அரசியல்வாதி இல்லை.
காலிமுகத்திடல் போராட்டத்தை நாம் கொள்கைரீதியாக ஆதரிக்கிறோம். “கோட்டா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், அதற்காக இங்குள்ள பலரை போல நாங்களும், “கோட்டா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை, காலிமுகத்திடலில் இருந்தே கற்றோம் என எண்ண வேண்டாம்.
ஜனாதிபதி கோட்டாபய, இதைவிட பலமாக பாதுகாப்பு செயலாளராக இருந்த போதே, “கோட்டா-கோ-ஹோம்” என கோஷம் எழுப்பி போராடியவர்கள், நாங்கள். எங்கள் கொழும்பில் எங்கள் மக்களை வெள்ளை வானில் வந்து, பலவந்தமாக தூக்கி சென்ற வேளையில், 2005ம் ஆண்டிலேயே ராஜபக்சர்களை எதிர்த்து போராடியவன், நான்.
கொலை முயற்சி
எனது சக போராளி நண்பன் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். என்னை கொலை செய்ய முயற்சிகள் நிகழ்ந்தன. இந்த அநீதிகளுக்கு எதிராக நாம், இன்று, நேற்று அல்ல, பல்லாண்டுகளாக போராடி வருகிறோம். மதவாத, இனவாத, அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடியவர்கள், நாம்.
நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள். ஆகவே காலிமுக திடல் போராட்டத்தில் இருந்து போராட நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். நாங்கள் கற்க அங்கு எதுவும் இல்லை. நாம் புது போராளிகள் அல்ல. நாம் எப்போதும் ஜனநாயக போராளிகள்தான்.
காலிமுக திடல் போராட்டத்தை நாம் கொள்கைரீதியாக ஆதரிக்கிறோம். அந்த போராட்டம் மூலம் வரும் மாற்றத்தை நாம் வரவேற்கிறோம்.
அந்த மாற்றத்தின் மூலம் இலங்கை அரசியலில் இருந்து மதம் அகற்றப்பட வேண்டும். இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். அதுவரை எம் ஜனநாயக போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.