செம்மணி தொடர்பில் ரில்வினுக்கு தூது அனுப்பச் சொல்லும் மனோ
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரவுக்கும், ரில்வின் சில்வாவுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கான போராட்டம்
செம்மணி என்பது ஈழத்தமிழர்களின் அவலக் குரலின் அடையாளம். அரச பயங்கரவாதத்தினாலேயே செம்மணி போன்ற ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கே இருக்கும் எலும்புக்கூடுகள் நம்மவர்களின் எலும்புக் கூடுகள். செம்மணியின் மூலக்காரணமே போர்தான். போர் உருவாகுவதற்கு அடிப்படை நாட்டில் இருந்த தீரா தேசிய இனப்பிரச்சினைதான்.
வடக்கிலே விடுதலைப்புலிகள் போராடினார்கள் இராணுவம் அதை எதிர்த்துப் போராடியது. அதிகாரப்பகிர்வுக்காக தந்தை செல்வா முதல் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வரை ஈழத்தமிழர்களுக்காக போராடினார்கள்.
இன்னும் தமிழர்களின் போராட்டம் நீடித்துக்கொண்டே இருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்தாலும் யுத்தத்திற்கான காரணம் தொடக்கப் புள்ளியிலேயே இருக்கிறது.
ஜேவிபியின் கடந்த கால வரலாறு
அதிகாரப்பகிர்வு இந்த விடயத்தை அமைச்சர் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரவுக்கும், ரில்வின் சில்வாவுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இனி ஒரு செம்மணி நிகழாது என அமைச்சர் சந்திரசேகர் சொன்னால் மட்டும் போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும்.
இந்தநிலையில், ஜேவிபியின் கடந்த கால வரலாறு சிறப்பானது அல்ல. நீங்கள் யுத்தத்தை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு உதவியவர்கள்.
யுத்தத்திற்காக சிங்கள கிராமங்கள் தோறும் சென்று இளைஞர்களை சேர்த்துக்கொண்டவர்கள் நீங்களே. ஆனால் இன்று அநுர அரசாங்கம் நாங்கள் ராஜபக்சக்கள் அல்ல. பிரேமதாச அல்ல. சந்திரிக்கா அல்ல. சிறிமா அல்ல என கூறுகிறார்கள்.
இவை அனைத்தும் உண்மையாக இருக்குமானால் செம்மணி விவகாரத்திற்கு முறையான விசாரணை நடத்துங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |