மன்னார் தாக்குதலில் வெளிப்படும் அநுர ஆட்சியின் உண்மை முகம் - அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.
மன்னாரில் காற்றாலைக்கெதிரான போராட்டத்தில் மக்கள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் தாக்கப்பட்டமை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்கல்ல என்பதை ஏடுத்துக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு மன்னார் காற்றாலை விவகாரம் இலங்கை அரசியலிலும், தமிழ் அரசியலிலும் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற பணி முடக்கப் போராட்டத்துடனும், ஆர்ப்பாட்டத்துடனும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
சிங்கள அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும் போராட்டத்தை ஆதரித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசனும், காவிந்த ஜெயரத்தினாவும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம்
வன்னி மாவட்ட தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரவிகரன், சத்தியலிங்கம், காதர் மஸ்தான் ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கலந்து கொண்டார். தவிர பல தமிழ், சிங்கள சிவில் அமைப்புகளும் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தன.
போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக மனு ஒன்றும் மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்கான பாகங்களை மன்னார் தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சித்த போது மக்கள் அருட்தந்தைமாருடன் இணைந்து அதனைத் தடுத்திருந்தனர்.
இதன்போது பொலீசார் தாக்கியதில் அருட்தந்தைமார் உட்பட பலர் காயப்பட்டனர். படையினரின் இந்த அத்துமீறலுக்கு எதிராகவும், காற்றாலை அமைப்பதற்கு எதிராகவுமே இப் போராட்டம் இடம்பெற்றது.
இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது திட்டம் நடைமுறைப்படுத்துவதை ஒரு மாதம் காலதாமதப்படுத்துவதாகவும் அதற்கிடையில் துறை சார் நிபுணர்களை மன்னாருக்கு அனுப்பி மீளாய்வு செய்து மக்களுடன் கலந்துரையாடுவதாகவும் ஜனாதிபதியால் உறுதிமொழி வழங்கப்பட்டது.
ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழிகளின் படி துறைசார் நிபுணர்கள் எவரும் மன்னாருக்கு செல்லவில்லை. வலுசக்தி அமைச்சர் உட்பட ஒரு சிலர் தான் சென்றிருந்தனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் எதுவும் கலந்துரையாடாமல் கொழும்பு திரும்பியிருந்தனர். அரசாங்கம் மக்களை ஏமாற்றி விட்டு திட்டப்பணிகளை இரவோடு இரவாக ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இக் காற்றாலைகளை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படுவதால் சூழலியல் பாதிப்புகள் தொடக்கம், பொருளாதார பாதிப்புகள் வரை பல ஏற்படுவதாக சூழலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதில் முதலாவது வெள்ளப் பெருக்குகள் ஏற்படுவதற்காக வாய்ப்புகள் உருவாகுவதாகும். காற்றாலைக் கோபுரங்கள் கடற்கரையை ஒட்டியே அமைக்கப்படுகின்றன.
மழைகாலங்களில் வெள்ளம் வழிந்தோடுவதற்கு அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்கள் எல்லாம் அடைபடுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 36 கோபுரங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. அக் கோபுரங்களினால் இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் மழைகாலங்களில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது கடல் நீர் உள்ளே வருவதற்கான அபாயமாகும். கோபுரங்களை அமைப்பதற்காக 70 அடி ஆழம்வரை தோண்டப்படுகின்றது. இதனால் கடல் நீர் ஊருக்குள் வரக்கூடிய அபாயம் உருவாகக் கூடிய வாய்ப்பும், மழை நீரை மண்ணுக்குள் சேகரிக்க முடியாத நிலையும் உருவாகின்றது. நிலத்தடி நீர் மாசுபடுவது வெறுமனே மன்னார் தீவை மட்டும் பாதிக்கப் போவதில்லை.
அது மன்னார் பெரு நிலப்பரப்பையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும். பெரு நிலப்பரப்பில் பல்வேறு விவசாயச் செய்கைகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவையெல்லாம் பாதிப்புக்குள்ளாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனும் இதனை சுட்டிக்காட்டியிருந்தார். மூன்றாவது காற்றாலைகளினால் வரும் இரைச்சல் ஒலியாகும்.
இது பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் மக்களைப் பாதிக்கின்றது. இதில் முதலாவது மன்னாரில் அதிகளவில் சிறு மீனவர்கள் உள்ளனர். இவர்கள் அதிகமாக பட்டி வலை, கரை வலைத் தொழிலிலேயே ஈடுபடுகின்றனர்.
பட்டி வலைத் தொழில் என்பது வலையை ஆழம் குறைந்த கடலுக்குள் போட்டு மீன்கள் வந்து சேர்ந்த பின் வலைகளை வெளியில் எடுத்து பிடிக்கின்ற தொழில் முறையாகும். கேரதீவு, சங்குப்பட்டி கரைகளில் இத் தொழிலில் பலர் ஈடுபடுவதைக் காணலாம். கரை வலைத் தொழில் கடலுக்குள் வலையை வீசி பின்னர் இழுத்து எடுப்பதாகும். காற்றாலைகளின் இரைச்சல் காரணமாக மீன்கள் அதிகளவில் கரைக்கு வரமாட்டா.
இதனால் இத்தொழில்கள் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்படும். இரண்டாவது கோபுரங்கள் அமைக்கப்படும் இடங்கள் கம்பி அடிக்கப்பட்டு பாதுகாக்க இருப்பதனால் மக்கள் பட்டி வலை, கரை வலைத்தொழில்கள் செய்யும் இடங்களும் இல்லாமல் போகும். மீனவர்கள் அந்த இடங்களுக்கு செல்ல முடியாது.
மீன்களைக் கொள்வனவு செய்வோரும் அங்கு செல்ல முடியாது. கரையோரங்கள் பொதுவாக மீன்கள் விற்பனை செய்யும் இடங்களாகவும் இருப்பது வழக்கமாகும். மூன்றாவது மீன்களின் இனப்பெருக்கம் பாதிப்படைவதாகும். மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஆழங்குறைந்த களப்புக்களை நோக்கி வருவதே வழக்கமானதாகும்.
காற்றாலைகளின் இரைச்சல்களினால் மீன்கள் களப்புக்கு வருவதும் இல்லாமல் போகும் இதனால் மீன்களின் இனப்பெருக்கமும் இல்லாமல் போக அது சிறு மீனவர்களின் வருமானத்தில் பலத்த பாதிப்பை உருவாக்கும். நான்காவது இரைச்சல் ஒலியினால் பாடசாலை செல்லும் சிறுவர்கள், முதியவர்கள், நோயாளர்கள் பாதிப்பை எதிர் நோக்குவதாகும்.
இரைச்சல் ஒலிகள் நீண்ட தூரத்திற்கு ஒலி எழுப்புவாயாக இருக்கும். மறவன்புலவில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் ஒலி யாழ்ப்பாணம் பூநகரி வீதியால் செல்பவர்களுக்கே கேட்கக் கூடியதாக உள்ளது. மன்னார் மக்களைப் பொறுத்தவரை ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள காற்றாலைகளினால் இத்தகைய தொல்லைகள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.
பேசாலை தொடக்கம் நடுக்குடா வரை இக்காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அமைக்கப்பட்ட காற்றாலைகளினால் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாக மீளாய்வு செய்யாமல் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மக்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஐந்தாவது மன்னார் வரும் பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.
மன்னாருக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பறவைகள் வருகின்றன. ஒருவகையில் மன்னார் பறவைகளின் சரணாலயமாக இருக்கின்றது எனலாம். இனப்பெருக்கம் செய்வதற்காகவே வருவது வழக்கம். அவை வரும் கடற்பாதையில் காற்றாடிகள் இருப்பதினால் அதன் இரைச்சல் பறவைகள் வருவதனைப் பாதிக்கும். ஏற்கனவே காற்றாடிகள் அமைக்கப்பட்டதால் பறவைகள் வருகை குறைவாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது காற்றாடிகளில் அடிபட்டு பறவைகள் இறக்கும் சூழ்நிலைகளும் உருவாகும்.
ஆறாவது காலத்துக்கு காலம் காற்றாடிகளில் இருக்கும் பூச்சிகள், தூசுகள் என்பவற்றை சுத்தீகரிப்பதற்காக கிருமிநாசினிகள் கொண்டு சுத்தீகரிப்பு செய்வது வழமையானதாகும். அவ்வாறு சுத்தீகரிக்கும் போது கிருமி நாசினிகள் காற்றில் கலப்பதும், கடலில் கலப்பதும் இடம்பெறப் பார்க்கும்.
இது மக்களின் சுவாசப் பிரச்சனையில் பாதிப்பினை ஏற்படுத்துவதோடு மீன்;கள் உட்பட கடல் வாழ் உயிரினங்களிலும் பாதிப்பை உருவாக்கும். இத்தகைய சூழல் பாதிப்புகள் காரணமாக வெளிநாடுகளில் காற்றாலைகளை அமைக்கும் போது மக்கள் குடியிருப்புகளை தவிர்ப்பது வழக்கம். நோர்வேயில் இவ்வாறு காற்றாடிகள் மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட போது மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதனால் மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் காற்றாலைகள் அமைக்கப்படுவது நிறுத்தப்பட்டு மலைகளிலும், காடுகளிலும் அமைக்கப்பட்டன. மன்னாரிலும் குடியிருப்புப் பிரதேசங்களை அரசாங்கம் தவிர்த்திருக்கலாம். மக்கள் வாழாத பிரதேசங்களில் குறிப்பாக காட்டுப் பிரதேசங்களில் அமைத்திருக்கலாம். மன்னார் - புத்தளம் வீதி வில்பத்து காட்டை பாதுகாப்பதற்காக தற்போது அடைக்கப்பட்டுள்ளது.
அப் பிரதேசங்கள் மக்கள் வாழாத பிரதேசங்கள் அங்கு அமைப்பது பற்றி முடிவு செய்திருக்கலாம். அடுத்தது கனிய மணல் அகழ்வுப் பிரச்சனை, காற்றாலை பிரச்சனை பேசுபொருளான அளவிற்கு கனியமணல் அகழ்வுப் பிரச்சனை பேசு பொருளாகவில்லை. கனியமனல் அகழ்வு விவகாரம் மிகக் கவனமாகக் கையாள வேண்டிய விவகாரம்.
அதனாலும் பலத்த சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது. மணல் திட்டுக்கள் கடல் நீர் கிராமங்களுக்குள் நுழையாதவாறு தடுக்கும் இயற்கை அரண்கள். வகை தொகையில்லாமல் அகழ்வு இடம்பெறுகின்ற போது கடல் நீர்கிராமங்களுக்குள் வரக்கூடிய சூழல் ஏற்படும். அதுவும் சுனாமி போன்ற பேரனர்த்தம் இடம்பெறுகின்ற போது கிராமங்களே அழியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். வடமராட்சி கிழக்கில் சுனாமி பேரனர்தத்தின்போது இந்த மணல் திட்டுகளே பல கிராமங்களைப் பாதுகாத்திருந்தன.
வடமராட்சி கிழக்கு பிரதேசம் ஆரம்பிக்கும் வல்லிபுர கோவிலிருந்து மாமுனைவரை பாதுகாத்தது எனலாம். மணல் திட்டுக்கள் இல்லாத இடங்கள் பேரழிவைச் சந்தித்தன. இந்த கட்டுக்கடங்காத மணல் அகழ்வுப் பிரச்சனை வடமராட்சி கிழக்கு கிராமங்களிலும் உண்டு. அங்கு ஒரு பக்கம் சமுத்திரக்கடல். மறுபக்கம் கடல் நீரேரி. இரண்டுக்குமிடையே குறுகலான இடைவெளியிலேயே மக்கள் குடியிருப்புகள் உள்ளன வல்லிபுர கோவிலிருந்து செம்பியன் பற்று வரை இரண்டு கிலோமீட்டர் இடைவெளியே உண்டு.
செம்பியன் பற்றிலிருந்து சுண்டிக் குளம் வரை ஒரு கிலோ மீட்டர் இடைவெளியே உண்டு. சுனாமி பேரடரின் போது யுத்தம் காரணமாக பல பிரதேசங்களில் மக்கள் வாழாததினால் உயிர் இழப்பு குறைவாக இருந்தது. மக்கள் வாழ்ந்த மணல் காடு, ஆழியவளை, உடுத்துறை பிரதேசங்களில் உயிர் இழப்பு அதிகமாக இருந்தன. குடும்பங்களாக உயிர் இழப்பும் ஏற்பட்டிருந்தது. உடுத்துறை நினைவிடத்தில் இவற்றை அவதானிக்கலாம். இரண்டாவது இயற்கை வளங்கள் என்பவை மிக அரிதானவை.
அது இனி வரப் போகும் தலைமுறையும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். வெளிநாட்டுக்கம்பனிகள் குறுகிய காலத்தில் அதிக அளவில் அகழ்வதால் இனி வரப் போகும் தலைமுறைக்கு அந்த வளங்கள் கிடைக்காத போகும். இது ஒரு அடிப்படை உரிமைப் பிரச்சனையாகும். எப்பபாவல பொசுவேற்றுக் கனியம் அகழும் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு இனி வரப் போகும் தலைமுறைக்கும் அது தேவை என தடுத்து நிறுத்தியது. இதில் சரியான நம்பிக்கைப் பொறுப்பாளனாக அரசாங்கம் இருக்கவில்லை என்றும் அரசாங்கத்தை குற்றச்சாட்டியது.
எனவே கனிய மணல் அகழ்வு இயற்கையை பாதிக்காத வகையிலும், வரப் போகும் தலைமுறையைப் பாதிக்காத வகையிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிரதேசங்களின் வளங்கள் அந்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்குரியவை. அதன் பலாபலன் அந்த மக்களைச் சென்றடைய வேண்டும். காற்றாலைகளினாலும், கனிய மணல் அகழ்வினாலும் அந்தப் பிரதேச மக்களுக்குரிய பயன்கள் என்ன என்பது தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. அரசாங்கமும் வெளிநாட்டுக் கம்பனிகளும் மட்டும் பயனடையுமானால் அந்தப் பிரதேச மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? என்ற நியாயமான கேள்வியும் இங்கு எழுகின்றது.
மன்னார் மாவட்டம் இலங்கைத் தீவிலேயே கத்தோலிக்க மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசம். வரலாற்று புகழ்மிக்க மடுத்திருப்பதியும் அங்கு உண்டு. கத்தோலிக்க மக்கள் திருச்சபையின் கட்டுப்பாட்டில் வசிப்பதால் அங்கு சீரான ஒழுக்க விழுமியங்கள் பின்பற்றப்படுவதோடு ஒப்பீட்டு ரீதியில் அமைதியான பிரதேசமாகவும் இருக்கின்றது.
பிரச்சனைகள் ஏற்படும் போது கத்தோலிக்க மத பீடமே தலையிட்டு அவற்றைத் தீர்த்து வைக்கும். வெளிநாட்டுக் கம்பனிகள் காலூன்றும் போது அந்த அமைதியும், ஒழுக்க விழுமியங்களும் பாதிப்படையலாம் என்ற அச்சமும் மக்களுக்கு உண்டு . இவற்றைவிட ஒரு அரசியல் பிரச்சினையும் இங்கு இருக்கின்றது எனலாம் தமிழ் மக்கள் நீண்ட காலமாகவே இன ஒடுக்கு முறைக்கு உட்பட்டு வருகின்றனர்.
அதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்காக இருக்கப் போவதில்லை மன்னாரில் மக்களும் அருட் தந்தைமார்களும் படையினரால் மோசமாகத் தாக்கப்பட்டமை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்காக இருக்கப் போவதில்லை என்பதை வெளிக்காட்டியுள்ளது. இந்நிலையில் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் அபிவிருத்;திகள் அங்குள்ள மக்கள் நிறுவனங்களுக்கூடாக மேற்கொள்ளப்படுவது அவசியமானதாகும். தாயகத்தில் மக்கள் நிறுவனங்களாக உள்ளூராட்சிச் சபைகள் உள்ளன. வடமாகாண சபை உள்ளது.
மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உள்ளது. இவற்றை விட திருச்சபை போன்ற மத நிறுவனங்களும், சிவில் அமைப்புகளும் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றிற்கூடாகவே அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றைத் தவிர்த்து மத்திய அரசு நேரடியாக மேற்கொள்ளும் அபிவிருத்திகள் மக்களைப் பொறுத்தவரை உண்மையான அபிவிருத்திகளாக அமையாது மாறாக அவை பச்சை ஆக்கிரமிப்புகளாகவே அமையும். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் அதனையே வெளிப்படுத்துகின்றன. மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி மயிலிட்டி மக்களுக்கு பயனுடையதாக இருக்கவில்லை.
சிங்கள மீனவர்களே அதன் பயன்களை அனுபவிக்கின்றனர். சிங்கள மீனவர்களுக்காக வடபகுதியில் அமைக்கப்பட்ட துறைமுகமாக மயிலிட்டி துறைமுகத்தைக் குறிப்பிடலாம். பலாலி விமான நிலையம் தமிழ் மக்களுக்கு ஓரளவு பயனுடையதாக இருந்த போதும் முக்கிய அலுவலர்களாக சிங்களவர்களே உள்ளனர். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தமிழ் மக்களுக்கு பயன்பட்டுவிடும் என்பதற்காக அபிவிருத்திச் செயற்பாடுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அதிக பயன்களைத் தரப் போவதில்லை என அமைச்சரே ஆருடம் கூறியிருக்கின்றார. மன்னார் விவகாரத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மக்களுக்கு முன்னால் நிற்க வேண்டிய இடத்தில் மக்களுக்கு பின்னாலே நிற்கின்றன. இது மிகவும் கவலைக்குரியதாகும. மக்களுக்கும், அரசாங்கத்திற்குமிடையே இடைக்கருவிகளாக இருக்க வேண்டியவர்கள் அதிலிருந்து நழுவி ஓடுகின்றார்கள். தலைவர் முன்னே! மக்கள் பின்னே! என்ற நிலை மாறி மக்கள் முன்னே! தலைவர்கள் பின்னே! என்ற நிலை தொடரும் போலவே தெரிகின்றது. மக்கள் தாக்கப்பட்ட போது தலைவர்கள் எரும் அங்கிருக்கவில்லை.
மன்னாரில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் நாள் முழுவதும் மக்களோடு தலைவர்கள் நின்றிருக்க வேண்டும். மக்கள் போல, அருட் தந்தைமார் போல அடி வாங்குவதற்கு தலைவர்கள் தயாரில்லை என்பதனையே இது காட்டுகின்றது. இத்தலைவர்களை நினைத்து மக்கள் தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு தெரிவு அவர்களுக்கில்லை.





விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
