மன்னார் காற்றாலை விவகாரம்.. அரசாங்க அதிபரிடம் மனு கையளிப்பு
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து மன்னார் தீவுக்கு கொண்டு வரும் வேலைகள் நடைபெறுகின்ற நிலையில் தயவுசெய்து அவற்றை உடன் நிறுத்தி மக்களிடம் பேச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (25) மதியம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இடம் கையளித்த மனுவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் மக்கள் 50 நாட்களுக்கு மேலாக போராட்டம் செய்து கொண்டு, ஜனாதிபதியிடம் இருந்து நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில், இவ்வாறான ஒரு கடிதம் வந்திருக்கிறது.
அதை நீங்கள் உடனடியாக எங்களுக்கு தரவில்லை என்பதும் கவலை அளிக்கிறது. கடிதத்தை நாங்கள் வந்து தான் பெற்றுக் கொண்டோம். ஜனாதிபதியின் முடிவுகள் மன்னார் மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.
பல நாள் கோரும் மக்கள்..
ஜனாதிபதி தனது மக்களாகிய எங்களுடன் பேசுவார் மக்களின் வாழ்வை பாதிக்காத வகையில் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார் என எதிர்பார்த்து இருந்தோம். நாங்கள் வஞ்சகமான முறையில் ஏமாற்றப்பட்டுள்ளோம். ஜனாதிபதியின் முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உடன் வேலைகளை நிறுத்தி ஜனாதிபதியுடன் பேசி முடிவுகளை எடுக்க எதிர்பார்க்கின்றோம்.
காற்றாலை கோபுரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து மன்னார் தீவுக்கு கொண்டு வரும் வேலைகள் நடைபெறுகிறது. தயவுசெய்து அவற்றை உடன் நிறுத்தி மக்களிடம் பேசவும். மக்களுடைய விருப்பத்திற்கும் உரிமைக்கும் எதிராக நீங்கள் செய்ய இருக்கும் நடவடிக்கைகளினால் ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும், அழிவுகளுக்கும் நீங்களே பொறுப்பு கூற வேண்டி வரும்.
ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கும் வரை மக்கள் போராட்டமானது இலங்கை யாப்பிற்கும் சட்டத்திற்கும் உட்பட்டு முன்னெடுக்கப்படும். எங்கள் புனித போராட்டமானது விரிவடைந்து செல்வது உங்களுக்கு தெரியும். அதை இன்னும் விரைவாக எமது நாடு பூராகவும் விரிவுபடுத்த உள்ளோம்.
ஜனாதிபதியினால் தரப்பட்ட ஒரு மாத கால வேலை நிறுத்தத்தை கவனிப்பதற்கு ஒரு குழு உங்கள் தலைமையில் உருவாக்கப்பட்டது. உங்கள் குழுவானது அந்த பகுதியில் நடந்த வேலைகளை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இலங்கை மின்சார சபையானது பாரிய வேலைகளை முன்னெடுத்துள்ளது.
தரப்பட்ட கடிதங்கள் தெளிவில்லை ஏமாற்றப் படுகின்ற விதத்தில் அமைந்துள்ளது. எனவே தயவு செய்து உடனடியாக மக்களின் வாழ்வினையும் வளத்தையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வதை எதிர்பார்க்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.








