சீரற்ற நிலையில் மன்னார் புகையிரத நிலைய பிரதான வீதி
மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான செளதார் புகையிரத நிலைய பிரதான வீதி பல வருடங்களாக உரிய முறையில் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
முன்னதாக, குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறாத நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பி சென்றது.
இந்தநிலையில், புகையிரத பயணங்களுக்குக்காக செல்லும் பொதுமக்கள் உட்பட சாந்திபுரம், சௌத்பார் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியை ஒழுங்கான முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கோரிக்கை
இவ்வாறான பின்னணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் செய்யப்படும் சீராக்கும் பணிகளும் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறிப்பாக வீதிகளில் பள்ளங்களை நிரப்பும் பணிகள் கூட ஏனோ தானோ என இடம்பெறுவதாகவும் அவையும் குறுகிய காலப்பகுதியில் சேதமடைவதாகவும் சாந்திபுரம் கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறான நிலையில், பயன்படுத்த முடியாத வீதியை சீராக்கல் என்ற பெயரில் வீதி அபிவிருத்தி அதிகார சபை அரச பணத்தை வீணாக்குவதை விடுத்து வீதியை முழுமையாக புணரமைத்து தருமாறு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |