நல்லாட்சி காலத்தில் யாழில் போடப்பட்ட வீதிக்கு எதிராக வழக்கு தொடர முடிவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் போடப்பட்ட மருதங்கேணி - பருத்தித்துறை வீதி தொடர்பில் வழக்கு ஒன்றை நீதிமன்றில் தொடுக்க இருப்பதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் வைத்து நேற்று(06.02.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“மருதங்கேணி தொடக்கம் அம்பன் வரையான 16km வீதி பயணிக்க முடியாத நிலையில் சிதைவடைந்து காணப்படுகின்றது.
நோயாளிகளுக்கு சிரமம்
வைத்திய தேவைகள், வியாபார நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப்பட்ட தொடர் கோரிக்கைகளால் வீதி திருத்தும் பணிக்கு நிதி வந்ததாக தெரிவிக்கப்படும் போதும் வீதி இன்னும் புனர்நிர்மானம் செய்யப்படவில்லை.
நோயாளிகளை கொண்டு செல்வதற்கு பெரும் சிரமம் காணப்படுவதாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி கூறுகின்றார்.
பல தரப்பட்ட கடிதங்களை அனுப்பியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் தொடர்ந்து பணி செய்வதற்கு சிரமமாக உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
வழக்கு தாக்கல்
அண்ணளவாக குறித்த வீதியின் ஒரு கிலோ மீட்டர் பகுதியை புனரமைப்பதற்கு 8 கோடியே 2இலட்சத்து 92 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
16km வீதிக்கு பெருந்தொகையான பணத்தை செலவிட்டு தரம் குறைந்த வீதியாக புனர் நிர்மானம் செய்துள்ளனர். வீதி படுமோசமாக பயணிக்க முடியாமல் உள்ளது. வீதியை புனர் நிர்மானம் செய்யாவிடின் இதற்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.
இந்த வழக்கில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், பிரதேச சபையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |