போதைப்பொருள் வர்த்தகரை விடுவித்த பொலிஸார்
மன்னாரில் விசேட அதிரடிப்படையினரால் ஐஸ் போதைப்பொருளுடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
எனினும் மன்னார் பொலிஸார் குறித்த போதைப்பொருள் வர்த்தகரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது விடுவித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
குற்றவாளியை விடுவிப்பு
விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.01.2023) காலை 7.30 மணியளவில் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்ததுடன் குறித்த காணியில் இருந்து 4 கிராம் 54 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களை மீட்டுள்ளனர்.
பின்னர் விசாரணைகளை முன்னெடுத்த விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரையும் மீட்கப்பட்ட ஐஸ் போதைப் பொருளையும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
எனினும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த போதைப்பொருள் வர்த்தகரை
சான்றுப் பொருளான ஐஸ் போதைப்பொருளுடன் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தாது விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக செயற்பாட்டாளர்கள் விசனம்
மன்னாரில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விடுவிக்கப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் ஐஸ் போதைப்பொருளுடன் போதைப்பொருள் வர்த்தகர்
ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட போதும், குறித்த நபரை மன்னார் பொலிஸார் விடுதலை
செய்துள்ளதாக குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.