எரிபொருள் தட்டுப்பாடு: கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை (Photo)
கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் சீராக இடம்பெறாத பட்சத்தில் கொழும்பில் உள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என மீனவ சமாச செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 40 நாட்களுக்கு மேலாக மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறவில்லை. இதனால் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்றொழிலாளர்கள் பெரிதும் சிரமபடுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகள்
கடற்றொழில் அமைச்சரோ, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளோ குறித்த விடயத்தில் கரிசனை காட்டுவதாக தெரியவில்லை என பள்ளிமுனை கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டில் தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்ற நிலையில் எரிபொருள் பிரச்சினை காரணமாக கடற்றொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியாததால் தங்கள் குடும்பங்களும் வறுமையில் வாடுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இதற்கமைய கடற்றொழிலாளர்கள் 1000 ரூபாய் கொடுத்து எரிபொருள் பெற்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டாலும் உரிய இலாபம் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அண்மைய நாட்களாக வாகனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல்
விநியோகம் இடம்பெறுகின்றது.
ஆனால் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எரிபொருள் அமைச்சரோ கடற்றொழில்
அமைச்சரோ ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.