மன்னாரிலுள்ள வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையம் ஒன்று தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
மன்னார் பகுதியில் வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையத்தை நடத்துவதற்காக, ஜயந்த மல்கம் திரிமான்ன என்பவருக்கு வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யும் அதிகாரிகளின் தீர்மானத்தை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்திய மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் மன்னார் பிரதேச செயலாளரின் தீர்மானத்தை எதிர்த்து ஜயந்த மல்கம் திரிமான்னவினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவின் மீதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால உத்தரவு டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரதிவாதிகளுக்கு முறையான அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வர்த்தக நடவடிக்கை
அத்துடன், உரிமம் இடைநிறுத்தப்பட்டதற்கான காரணம் தொடர்பான விசாரணை ஏதேனும் இருந்தால், அதனை நிறைவு செய்யுமாறும், மதுவரி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோரப்பட்ட அனைத்து விடயங்களும் உரிமங்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில், 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி, தாம், தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மதுவரி ஆணையாளர், மன்னார் பிரதேச செயலாளருக்கு 2024 - செப்டெம்பர் 30ஆம் திகதியன்று வழங்கப்பட்ட கடிதம் தொடர்பில் தாம் அச்சமடைந்துள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்.
அதில், விசாரணையில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை மனுதாரரின் உரிமம், 2024 செப்டெம்பர் 30 முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |