அரசாங்க அதிபர் வெற்றிடத்தை உடனடியாக நிரப்புங்கள்: ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிடம் தொடர்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு மேலாக மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிடம் காணப்படுகின்ற நிலையில் உடனடியாக அரச அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இன்றையதினம்(04.10.2023) இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
பலவீனமான அரசியல் தலைவர்கள்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிடம் ஒரு மாதத்திற்கு மேலாக காணப்படுகிறது. மாவட்டத்தில் பல்வேறு விதமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக பெரும்போகம் விவசாய நடவடிக்கைகள் தொடங்கவுள்ளதால் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக பல பிரச்சினைகள் காணப்படுவதுடன் மாவட்ட ரீதியாகவும் பல விடயங்களுக்கு தீர்மானம் எடுப்பதில் பல்வேறு தாமதங்கள் ஏற்படுகிறது.
கடந்த காலத்தைப் போல் அல்லாமல் வலிமையான, ஆளுமையுள்ள,செயல் திறனுள்ள, வல்லமையயுள்ள ஒருவரை மதவாதம், அடிப்படைவாதம், அரசியல் நோக்கு நிலை வாதம் கடந்து நிர்ணய நிலையில் உள்ள சமூக சம நீதியை பின்பற்றக்கூடிய ஒருவரை மிக விரைவாக நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் காணி விடுவிப்பு உட்பட அரசியல் தீர்மானங்கள் யாவும் எமது மாவட்டத்தில் ஒழுங்காக நிகழ்வதில்லை.
மிகப் பலவீனமான அரசியல் தலைவர்கள் உள்ளதால் நிர்வாகத் தலைமைக்காவது ஆளுமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.