பதற்ற நிலைக்கு மத்தியில் எடுக்கப்பட்ட தீர்மானம்: கடுமையாக எச்சரித்த மானிப்பாய் தவிசாளர்
மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெசீதன், தனது இயலாமையை காரணம் காட்டி விசேட கூட்டத்தை நிறுத்தியதாக உறுப்பினர் பகீரதன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று (27.03.2026) இடம்பெற்ற மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போது இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, ஏனைய உறுப்பினர்களும் தவிசாளருக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
சுற்றறிக்கையை அடிப்படையாக கொண்டு முயற்சி
தவிசாளர் க. ஜெசீதன் கடந்த சில வாரங்களாக இந்தியா சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், விசேட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதையடுத்து, உறுப்பினர்கள் உப தவிசாளரை தலைமையாகக் கொண்டு கூட்டத்தை நடத்த முயற்சித்துள்ளனர்.

1/3 பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் கூட்டத்தை நடத்த முடியும் என்ற சுற்றறிக்கைக்கு அமைவாக, 11 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூட்டத்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
எனினும், அந்த கூட்டத்தில் தனக்கு எதிராக தீர்மானங்கள் எடுக்கப்படக்கூடும் என்ற அச்சத்தினால், தனது இயலாமையை காரணம் காட்டி தவிசாளர் கூட்டத்தை நிறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பதற்ற நிலைக்கு மத்தியில் எடுக்கப்பட்ட தீர்மானம்
தவிசாளர் இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தாலும், அதே கட்சியின் உறுப்பினர்கள் உட்பட ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களும் அவருக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளனர். இதனால் சபையில் கடும் பதற்ற நிலை உருவானது.

பின்னர், நடத்தப்படாமல் விடப்பட்ட கூட்டத்தை எதிர்வரும் காலத்தில் குழுநிலை கூட்டமாக நடத்தலாமா அல்லது மீண்டும் விசேட கூட்டமாக நடத்தலாமா என்ற விவகாரம் தொடர்பாக கடுமையான வாதப்பிரதிவாதங்களாக உறுவெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, குறித்த கூட்டத்தை குழுநிலை கூட்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபையை விட்டு வெளியேறிய பெண்
இதேவேளை, அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றியும் சபையை நடத்த முடியும் என மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெசீதன் தெரிவித்ததையடுத்து, பெண் உறுப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் உறுப்பினர் மயானம் தொடர்பான பிரச்சினையை விவாதிக்க நீண்ட நேரமாக எழுந்து நின்று பேசுவதற்கான வாய்ப்பை கோரியிருந்தார்.

எனினும், தவிசாளர் அதனை உடனடியாக கவனிக்காததுடன், அந்நேரத்தில் ஏனைய உறுப்பினர்கள் சபையில் சத்தமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது, அவர் தனது கருத்துகளை முன்வைக்கும் வேளையில், இரண்டு உறுப்பினர்கள் இடையூறு செய்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண் உறுப்பினர், அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடுமையாக எச்சரித்த தவிசாளர்
தொடர்ந்து, தவிசாளரை நோக்கி,
“எனது கருத்தை நான் தெரிவிக்கிறேன், அதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் ஒப்புக்கொள்ளுங்கள், இல்லையெனில் மறுப்பு தெரிவியுங்கள்” எனக் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த தவிசாளர், “நீர், நான் என்று பேச முடியாது. அவ்வாறு பேச வேண்டாம். தேவையானால் எனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றியும் சபையை நடத்த முடியும். கவனமாக பேச வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, சபையில் சில நேரம் அமளி துமளி நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.