யாழ். பொது மலசலகூட விவகாரம்: மாநகரசபையை எச்சரித்த இலங்கை போக்குவரத்து சபை
யாழில் இலங்கை போக்குவரத்து சபையின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் யாழ் மாநகர சபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஏற்பட்ட குழப்ப நிலைக் காரணமாக சில மணி நேரங்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(28.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்ற நிலை
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று (28) காலை, யாழ் மாநகர சபை ஊழியர்கள் குறித்த பொது மலசலக் கூடத் தொகுதிக்கு நீர் இணைப்பை வழங்கும் நோக்கில் சென்றிருந்தபோது, அவர்கள் இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) அதிகாரிகளால் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில், கடந்த ஆட்சிக்காலத்தில் இ.போ.சவினால் இந்த பொது மலசலக் கூடக் கட்டிடம் அமைக்கப்பட்டதுடன், அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்காக குத்தகைக்கு விடப்பட்ட இ.போ.சவின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பிலேயே இந்த மலசலக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
தன்னிச்சையாக செயற்பட முயலும் மாநகர சபை
மேலும், இந்த கட்டிடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன், யாழ் மாநகர சபை இ.போ.சவிடம் தேவையான அனுமதியையும் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி குறித்த மலசலக் கூடத் தொகுதியை குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பங்களை யாழ் மாநகர சபை தன்னிச்சையாக பத்திரிகைகள் மூலம் கோரியிருந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, குறித்த நிலப்பரப்பு யாழ் பிரதேச செயலகத்தின் கீழ் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எமக்குச் சொந்தமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த பொது மலசலக் கூடத்தை மாநகர சபை தன்னிச்சையாக நிர்வகிக்க முயன்றால், சேவையை முடக்கி போராட்டம் நடத்தி எமக்கான நீதியைப் பெற்றே தீர்வோம் என இ.போ.ச தரப்பு எச்சரித்துள்ளது.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
இதேவேளை, சம்பவ இடத்திற்கு வந்த யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்ததாவது: “இந்த நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானது. இது ஒரே ஒரு தரப்புக்காக ஒதுக்கப்படவில்லை.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த கட்டடத் தொகுதியை மாநகர சபை அமைத்துள்ளது. கட்டுமாணம் நடைபெறும் வரை எந்த பிரச்சினையும் வரவில்லை. ஆனால் மக்கள் பாவணைக்காக திறந்துவிடும் போதுதான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இ.போ.ச தொடர்ந்தும் இடையூறாக இருந்தால் பொலிஸாரின் உதவியுடன் சட்ட உதவியை நாடி நாம் இந்த கட்டடத்தை திறந்தே தீருவோம்” என்றனர்.