மானிப்பாய் பிரதேச சபை ஊழலில் ஈடுபடுகின்றதா! வலுக்கும் சந்தேகம்
மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட சாந்தை வைரவர் வீதி புனரமைப்பில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்து அந்த பகுதி மக்கள் நேற்றையதினம்(19.12.2025) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அந்த பகுதி வட்டார உறுப்பினர் சண்முகம் கிருஷ்ணலிங்கம் கருத்து தெரிவிக்கையில், மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் என்ற வகையில் எனக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபா நிதியில் எனது வட்டாரத்தில் உள்ள வைரவர் வீதியை புனரமைக்க சிபாரிசு செய்திருந்தேன்.
நான் சிபாரிசு செய்த வீதியை புனரமைத்து முடித்தாலும் அந்த ஒரு மில்லியனில் நிதி மிகுதியாக இருக்கும் என்று கூறி வேறு ஒரு வீதியையும் புனரமைப்பதற்காக சிபாரிசு செய்யுமாறு பிரதேச சபையால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வீதி புனரமைப்பு
இந்தநிலையில் எமது வட்டாரத்தில் உள்ள மற்றொரு வீதியை புனரமைக்குமாறு சிபாரிசு செய்தேன்.
அந்தவகையில் புனரமைப்பு பணிகளை செய்வதற்கு கேள்வி விண்ணப்பம் கோரப்படாமல், எமது ஊரில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றினூடாக வேலைத்திட்டத்தை செய்வதற்கு பிரதேச சபையினர் அவர்களிடம் படிவத்தை கையளித்தனர்.

குறித்த சனசமூக நிலையமூடாக வேலைத்திட்டத்தை செய்யுமாறு நானும் கூறவில்லை, எமது பகுதி மக்களும் கூறவில்லை. பிரதேச சபையினர் தன்னிச்சையாக சனசமூக நிலையத்திடம் வேலைத்திட்டத்தை ஒப்படைத்தனர்.பிரதேச சபைக்கும் அந்த சனசமூக நிலையத்திற்குமிடையே எவ்வாறு தொடர்பு வந்தது என்று எனக்கு தெரியாது.
இந்நிலையில் நான் உடனடியாக சனசமூக நிலைய உத்தியோகத்தரை தொடர்புகொண்டு, வட்டார உறுப்பினராகிய எனக்கோ அல்லது மக்களுக்கோ தெரியாமல் எப்படி சனசமூக நிலையத்திடம் வேலைத்திட்டத்தை ஒப்படைப்பீர்கள், அவர்களுடன் எவ்வாறு ஒப்பந்தம் செய்வீர்கள் என கேட்டேன்.
அதற்கு அவர் "அங்கு சனசமூக நிலையம் இருப்பதனால் அவர்கள் ஊடாகவே வேலைத்திட்டத்தை, ஒப்பந்தம் கைச்சாத்திட்டு செய்ய வேண்டும் என கூறினார்.
அந்த விடயத்தில் எனக்கும் திருப்தியில்லை. அதன்பின்னர் வேலைத்திட்டம் ஆரம்பித்த பின்னர்தான் அந்த புனரமைப்பு பணிகளில் குறைப்பாடு இருப்பதாக மக்கள் எனக்கு சுட்டிக்காட்டினர். அதாவது கீழே இடிபாடு போடாமல், தரமற்ற வகையில் வீதி புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினர்.
கோரிக்கை
நானும் இந்த விடயத்தை தவிசாளருக்கு தெரியப்படுத்திய நிலையில், தவிசாளரும் நானும், தொழில்நுட்ப உத்தியோகத்தரும் அந்த பகுதிக்கு சென்று புனரமைப்பு பணிகளை பார்வையிட்டபோது அங்கே தரமற்ற புனரமைப்பு பணிகள் நடைபெறுவதை அவதானிக்க முடிந்தது.
அதன்பின்னர், கருங்கல் அனைத்தையும் எடுத்துவிட்டு, கீழே இடிபாடுகளை போட்டு புனரமைப்பு பணிகளை தரமானதாக செய்யுமாறு கூறினோம். பின்னர் மிகுதி நிதியியல் அந்த வீதியின் தொடர்ச்சியை புனரமைப்பு செய்யுமாறு மக்கள் கூறினர்.

இந்தநிலையில் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்த மற்றைய வீதியில் உள்ள மூலப்பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதிக்கு இட்டு அந்த வீதியின் புனரமைப்பு பணிகளை பூரணப்படுத்துவதாக திட்டமிட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த வட்டார உறுப்பினரோ, அல்லது அந்தப் பகுதி மக்களோ கோரிக்கை முன்வைக்காத நிலையில், வட்டார உறுப்பினருக்கும் தெரியாமல் எதன் அடிப்படையில் பிரதேச சபையினரால் சனசமூக நிலையத்தினரிடம் வேலைத்திட்டம் ஒப்படைக்கப்பட்டது.
சனசமூக நிலையத்தினருக்கும் பிரதேச சபையினருக்குமிடையே எவ்வாறு தொடர்பு வந்தது.இவ்வாறு சனசமூக நிலையத்தினரிடம் வேலைத்திட்டத்தை ஒப்படைப்பதற்கான உள்நோக்கம் என்ன என்ற கேள்வியை அந்த பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ள விடயத்தின் உள்நோக்கம்! ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ள விடயம்