பல கோடி ரூபா வழங்கப்பட்டு அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியே ஆர்ப்பாட்டம்! - ந.ரவிக்குமார்
புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களினால் பல கோடி ரூபா சிவில் சமூகத்திற்கு வழங்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியே தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ந.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக எமது நாட்டிற்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டக்கூடியவர்களுடன் இணைந்து சிவில் சமூகம் ஏற்பாடு செய்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டம் பற்றித் தெளிவாகக் கூறவேண்டும்.
ஐ.நா மனிதவுரிமைப் பேரவையில் நடைபெறவிருக்கின்ற மனித உரிமை கூட்டத்தொடரிலே எமது நாட்டிற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராகவும் வெளிநாட்டிலிருக்கின்ற புலம்பெயர்ந்தவர்கள் சிவில் அமைப்புகளுடன் இணைந்து இங்கிருக்கின்ற சிவில் அமைப்புகளின் பங்களிப்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனாதிபதியோ, பிரதமரோ பயப்படப்போவதில்லை. நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்யலாம், இது ஜனநாயக நாடு, இங்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியிலே சிவில் சமூகத்திற்குப் பலகோடி ரூபா நிதி வழங்கப்பட்டுச் செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் பிரஜாவுரிமையை பெற்றுக் கொண்டு எமது நாட்டினுள் வாழ்ந்து கொண்டு எமது நாட்டிற்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் செய்யப்படுகின்ற இந்த சதித்திட்டங்களை முறியடிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஐ.நா மனிதவுரிமைப் பேரவையில் நடைபெறவிருக்கின்ற மனித உரிமை கூட்டத் தொடரிலே எமது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய விதத்திலே பலர் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
எமது அரசாங்கத்தை எவராலும் எதுவும் செய்துவிட முடியாது. கடந்த ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி அரசாங்கத்திலே அமைச்சுகள் எதனையும் பெறாவிட்டாலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவே அவர்கள் செயற்பட்டார்கள்.
அந்த நான்கரை வருடங்களும் இவர்கள் உறக்கத்திலிருந்தார்களா எனக் கேட்க விரும்புகின்றேன். சம்பந்தனும், சுமந்திரனும் ரணில் விக்கிரமசிங்கவின் கால்களில் மண்டியிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அன்று அவர்கள் நினைத்திருந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்கலாம். காணி அபகரிப்பை தடுத்திருக்கலாம். நான்கரை வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைக் காப்பாற்றிய பெருமை சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இருக்கின்றது.
சுமந்திரன் போன்ற கோமாளிகளும் கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் போன்றோரும் இனவாதத்தை கக்கி கக்கி எமது தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் அபிவிருத்திகளையும் நிறுத்துவதற்காக இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்று எங்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் நாங்கள் பிரதமருடன் பேசியிருக்கின்றோம்.
நிச்சயமாக இது கிடைக்கும். இதனைத் தடுப்பதற்காகவும் தங்களது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காகவும் இந்த மூன்று கோமாளிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
நேற்று முன்தினம் போராட்டத்திலே நான் பார்த்த பலரது உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதேபோல இவர்களும் முகவர்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்று அகதி அந்தஸ்து பெறுவதற்காக இராணுவமும், பொலிஸாரும் தங்களை பயமுறுத்துவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
பல இளைஞர்கள் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்திற்கு எதிராக அங்கு சென்று முறையிடும் போது அவர்களுக்கான விசாக்கள் கிடைக்கப்பெறும்.
இந்தப் பின்னணியில்தான் பல இளைஞர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். மக்களுடைய உரிமைக்காக அல்ல. இன்று வடமாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் திட்டமிட்டு ரிஷாட் பதியுதீன் எமது மக்களின் காணிகளைத் திட்டமிட்டு அபகரித்தபோது வாய்மூடி மௌனமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று குரல் கொடுக்கின்றது.
வன்னியிலே எமது தமிழ் மண்ணை நாங்கள் காப்பாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த மண்ணை முஸ்லிம்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு சஹ்ரானுக்கு உதவி செய்த முஸ்லிம் தீவிரவாதியான ரிஷாட் பதியுதீனுக்கு உதவி செய்துவிட்டு மௌனமாக இருக்கின்றனர்.
அதேபோல் கிழக்கில் முன்னாள் ஆளுநராகவும், அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஹிஸ்புல்லா ஆலயங்களை உடைத்து தன்னுடைய தேவைகளுக்கு உபயோகித்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாக இருந்துவிட்டு இன்று காணி அபகரிப்பு பற்றிப் பேசுகின்றனர்.
வடக்கிலும், கிழக்கிலும் திட்டமிட்டு புத்தளத்திலும், குருணாகலிலும் இருந்து இடம்பெயர்ந்துவந்து இங்கு குடியமர்ந்த போது அமைதியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சிங்கள மக்கள் இங்கு குடியேறுவதாக சொல்கின்றார்கள்.
எமது மக்களுடைய மேய்ச்சல் தரையை அவர்கள் அபகரித்ததாகச் சொல்கின்றார்கள். நான் முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிரானவனே தவிர முஸ்லிம் மக்களுக்கல்ல. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் இன்று சகோதரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை குழப்புவதற்கு அரசியல் பின்னணியில் பலர் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த மாதம் நான் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவை அவரது அமைச்சில் சந்தித்து கேட்டுக் கொண்ட விடயம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதாகும். அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதில் ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவாக இருக்கின்றார்கள்.
அரசியல்வாதிகளின் பின்னால் செல்வீர்களானால் அரசியல் கைதிகளின் விடுதலை நிச்சயமாக கிடைக்காது என்பதே உண்மையாகும். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தின் பின்னால் பெரியதொரு அரசியல் பின்புலமும், சிவில் அமைப்புகளும் செயற்படுகின்றன.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோதே காணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். ரணிலும் யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இல்லை என்பதை கூறிவிட்டார்.
இல்லாதவர்களை கொண்டு வந்து தரமுடியாது. 73ஆவது சுதந்திரதின விழாவைக் கரிநாளாக அனுஷ்டிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி கூறுகின்றார். கரிநாளாக அனுஷ்டித்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பாருங்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளும், புலம்பெயர்ந்த சிவில் சமூகமும் பணத்தினை அள்ளி வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
அந்தப் பணத்திற்காகவே இவர்கள் செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகம் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எனக்கும் மனவேதனை இருக்கின்றது. ஆனால் அவர்கள் இல்லாவிட்டால் எங்கிருந்து அவர்களை கொண்டு வருவது? பிச்சைக்காரன் காலிலே காயம் இருந்தால்தான் அவன் பிச்சையெடுக்கலாம்.
அதேபோன்ற கூட்டமே சம்பந்தன், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகளாவர். மக்கள் இவ்விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். உங்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் எமது நாட்டின் பிரச்சினையை எமது நாட்டிற்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
குடும்பப் பிரச்சினையைக் கொண்டு சென்று அயல் வீட்டில் சொல்வதால் நிச்சயமாக மாற்றம் எதுவும் ஏற்படாது. ஐ.நாவிடமோ அல்லது வேறு எங்கு சென்று கூறினாலும் எமது நாட்டின் பிரச்சினையை எமது ஜனாதிபதி, பிரதமர் ஊடாகவே தீர்த்துக் கொள்ள முடியும்.
இந்த பிரச்சினையை சர்வதேசத்திற்குக் கொண்டு சென்று எமது அரசாங்கத்தைச் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று கைது செய்வதற்கோ விசாரணை செய்வதற்கோ எந்தக் கொம்பனுக்கும் முடியாது.
இந்தப் பிரச்சினையை எமது அரசாங்கத்துடன் மாத்திரமே பேசி தீர்த்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
