தனியார் விமான சேவையின் முகாமைத்துவ பணிப்பாளர் கைது! - நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சகுராய் தனியார் விமான சேவையின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோர் இன்று (11) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 53 வயதான இரத்மலானையை வசிப்பிடமாகவும் மற்றையவர் 46 வயதான ஹொரணையை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
இந்த தனியார் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் அண்மையில் பயாகல மற்றும் கட்டானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டன. கட்டான கிம்புலாபிட்டிய பகுதியில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதில் இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி இலங்கை விமானப்படையிடம் தொழில்நுட்ப அறிக்கையை கோரியுள்ளனர்.
மனித உயிருக்கு அல்லது வேறு ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்துதல் அல்லது கடுமையாக காயப்படுத்துதல் அல்லது கடுமையாக காயப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
