யாழ். பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணம் (Jaffna) - வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்து முழுமையான உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை பருத்தித்துறை பதில் நீதிவான் விஜயராணி உருத்திரேஸ்வரன் நேற்று (19) பிறப்பித்துள்ளார்.
பருத்தித்துறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடி ஒழிந்திருந்த வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சந்திரபாலன் (வயது - 45) என்ற குடும்பஸ்தர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
மரணத்தில் சந்தேகம்
அவருடைய மனைவி ஆட்டிறைச்சியுடன் உணவு வழங்கினார் என்றும், பின்னர் அவருக்கு நெஞ்சு வழி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஊரணி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார் என்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
எனினும், மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், பொலிஸாரின் மோசமான தாக்குதலால் பாதிக்கப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழந்திருக்கலாம் என்றும் குடும்பத்தினரால் கூறப்பட்டது.
உடற்கூற்றுப் பரிசோதனை
இந்நிலையில், சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அங்கு சென்ற பருத்தித்துறை பதில் நீதிவான் விஜயராணி உருத்திரேஸ்வரன் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
உயிரிழந்த நபர், அவருக்கு எதிரான வழக்கு ஒன்றில் அண்மையில் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த அழைத்து வந்திருந்த நிலையில் நீதிமன்ற வாயிலில் வைத்து தப்பியோடியிருந்தார்.
இதையடுத்து பருத்தித்துறை நீதிமன்றத்தால் அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நேற்றுமுன்தினம் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |