இருவேறு இடங்களில் போதைப்பொருள் கடத்த முற்பட்ட சந்தேகநபர்கள் கைது (Photos)
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் போதைப்பொருள் கடத்த முற்படுகிறவர்களையும் கையிருப்பில் கொண்டிருப்போரையும் பொலிஸார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் இருவேறு இடங்களில் போதைப்பொருள் கடத்த முற்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை
திருகோணமலையில் 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட லக்விஜேகம பகுதியில் வைத்து சந்தேகநபர் இன்று (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த சந்தேகநபர் சோதனையின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர் காலி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையும் மாகந்த மதூஸின் நண்பர் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகள் முடிவுற்ற பின்னர், கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை
இதேவேளை, கேரளா கஞ்சா கடத்த முற்பட்ட சந்தேகநபரொருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் நேற்று (28) கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் 505 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்த முற்பட்டவேளையே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமையவே, இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர். போதைப்பொருளை கடத்தி செல்வதற்கு தயாராக இருந்தவேளை அம்பாறை மாவட்டம் கல்முனை வாடிவீட்டு வீதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிடமிருந்து தொலைபேசி ஒன்று, 505 கிராம் பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா, ஒரு தொகை பணம் மற்றும் பல்சர் ரக மோட்டார் சைக்கிள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் தலைமையின் கீழ் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாறுக் சிஹான்