மகிந்த - நாமல் மற்றும் ஷிரந்திக்கு எதிராக முறைப்பாடு..!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்களின் சக்தி என்ற அமைப்பின் தலைவர் ஜாமினி கமன் துஷார இன்று (22.09.2025) இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்.
தனது முறைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த அவர்,
“நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவிற்கு அளித்துள்ள சொத்து மதிப்பை விட பல சொத்துக்களை தனது உறவினர்களின் பெயரில் வைத்துள்ளார்.
புலனாய்வு விசாரணைகள்
நாம் அது தொடர்பில் தேடிபார்த்துள்ளோம். நாமல் எவ்வித தொழிலும் செய்யவில்லை. ஆனால், சட்டத்தரணியாக தொழில் செய்து எட்டு இலட்சம் சம்பாதித்ததாகவும் தெரிவித்துள்ள நிலையில் ஏனைய சொத்துகளின் விபரங்கள் தொடர்பில் தெரியப்படுத்தவில்லை.
அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை புதுப்பிக்க 5100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அதற்கான கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதா? எவ்வாறு பணம் ஒதுக்கப்பட்டது? மேலும், கொழும்பு 5, டொரிங்டன் மாவத்தை, எண் 260/12ஐ கொண்ட வீட்டை ஷிரந்தி ராஜபக்ச 05.04.2013ஆம் திகதியன்று 400 இலட்சத்திற்கு வாங்கியுள்ளார்.
மேரி லுவிஸ் விக்ரமசிங்க என்ற அவரது பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயரில் வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக சிரிலிய கணக்கிலிருந்து 350 இலட்சம் ரூபா கொடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு 350 இலட்சம் எவ்வாறு வந்தது என புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முறைப்பாடு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



