முல்லைத்தீவில் 35 ஆடுகளை திருடியவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் 9 இலட்சத்து முப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான ஆடுகளை களவாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது, நேற்று (17.04.2024) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள ஆட்டு மந்தை ஒன்றில் திடீரென வந்திறங்கிய குழுவினர் காவல் கடமையில் இருந்த இருவரை தாக்கியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன் பின்னர், சுமார் 9 இலட்சத்து முப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான 35 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, தாக்குதலுக்கு இலக்கான இருவரில் 55 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு முறையிட்டதையடுத்து சந்தேகத்தின் பேரில் வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
மேலும், சந்தேக நபரிடமிருந்து 15 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஆடுகளை கடத்தி செல்ல பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, சந்தேக நபர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதோடு விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
