கொழும்பில் கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்ட நடன கலைஞர்! நண்பர்கள் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலங்கள்
புதிய இணைப்பு
கெஸ்பேவ பகுதியில் நண்பர்களை சந்தித்த பின்னர் காணாமல்போன 30 வயது நடன கலைஞரின் கொலை குறித்து பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் 30 வயதான திருமணமான நடனக் கலைஞரான பி. டி. துஷ்மந்த சந்தருவன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று (28) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இசை வாத்தியக்காரர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் வெளியிட்ட வாக்குமூலங்கள்
அவர்களில் ஒரு முன்னாள் இராணுவ வீரரும், தேவாலயத்தில் பணியாளராகப் பணியாற்றுபவரும் அடங்கியுள்ளனர்.
முன்னாள் இராணுவ வீரரான பிரதான சந்தேகநபரின் மனைவியிடம், நடனக் கலைஞர் முறையற்ற விதத்தில் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவமே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, நடன நிக்ழ்வில் பங்கேற்கப் போவதாகக் கூறி, சந்தேகநபர்கள் 23ஆம் திகதியன்று நடனக் கலைஞரை கெஸ்பேவ பகுதிக்கு அழைத்து தேவாலயத்தின் பின்புறம் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸ் கூறுகிறது.
இந்த கொலைக்குப் பிறகு, சந்தேகநபர்கள் உடலை பெரிய சூட்கேஸில் வைக்க முயன்றதாகவும், ஆனால் அது முடியாமல் போனதால், இரும்புக்கம்பியால் எலும்புகளை அடித்து நொறுக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர், உடல் சூட்கேஸில் வைக்கப்பட்டு, கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கைவிடப்பட்ட நெல் வயலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டமை, சந்தேகநபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - கெஸ்பேவ பகுதியில் காணாமல்போன 30 வயது இளைஞரொருவர் கொலை செய்யப்பட்டு காட்டில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருவலவத்த பகுதியை சேர்ந்த இந்த இளைஞர் கடந்த 23ஆம் திகதி கெஸ்பேவ பகுதிக்கு தனது நண்பரை சந்திக்க செல்வதாக கூறி வெளியேறிய நிலையில், காணாமல்போயிருந்ததாக அவரது மனைவி பேராதனை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
வாக்குவாதம்
அதன்படி, பேராதனை பொலிஸார் அளித்த தகவலின் அடிப்படையில் கெஸ்பேவ பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இந்த கொலை குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி காலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் தனது நண்பரை சந்திக்க சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு காரணமாக, நண்பர் மற்றொரு குழுவினருடன் சேர்ந்து இளைஞரை கொலை செய்து, அவரது உடலை வனப்பகுதியில் புதைத்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
நீதித்துறை விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்களை கெஸ்பேவ பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு 20, 36 மற்றும் 37 வயது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், உடல் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் இன்று (29) நீதித்துறை விசாரணை நடத்தப்பட உள்ளது.
சம்பவம் குறித்து கெஸ்பேவ பொலிஸ் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றது.