தவறான உறவுக்கு மறுத்த பெண்ணை கொலை செய்த நபர்
தவறான உறவுக்கான யோசனையை நிராகரித்த 32 வயதான ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த பெண்ணை கொலை செய்த நபரை இன்று காலை கைது செய்ததாக அத்தனகல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பைனஸ் (ஏங்கு மரம்) தோட்டத்தில் மறைந்திருந்த போதே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாய்
அலவல ஹெபனாகந்த பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான எச்.ஆர்.ஷைமலி என்ற பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் அவர், வத்துப்பிட்டிவல வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் தொழிற்சாலையில் பணி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பும் வழியில் ஹெபனாகந்த பிரதேசத்தில் வீதியில் காத்திருந்த சந்தேக நபர், பெண்ணை கத்தியால் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
படுகாயமடைந்த பெண் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவே உயிரிழந்துள்ளார்.
இது சம்பந்தமாக கிடைத்த தகவலுக்கு அமைய அத்தனகல்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யசேந்திர நாலக தலைமையிலான பொலிஸார் இன்று காலை ஹெபனாகந்த பிரதேசத்தில் பைனஸ் தோட்டத்தில் தேடுதல் நடத்தி இன்று காலை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு செல்லும் வழியில் காத்திருந்த சந்தேக நபர்
சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணை தன்னுடன் தவறான உறவில் இருக்குமாறு பல முறை கோரியுள்ளதாகவும் அந்த பெண் அதனை நிராகரித்த காரணத்தினால் கொலை செய்துள்ளதாகவும் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆடை தொழிற்சாலையில் பணிப்புரிந்து வந்த இந்த பெண் பேருந்தில் வந்து இறங்கி, காடு சார்ந்த பகுதி ஊடாக வீட்டுக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது அங்கு காத்திருந்த சந்தேக நபர் பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.
சந்தேக நபரான அலவல ஹெபனாகந்த பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான நபர், கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அத்தனகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.