தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபத்தான நபர் - பேருந்து முன்னால் பாய்ந்து உயிர் மாய்ப்பு
காலி, பூஸ்ஸ சந்தியில் பேருந்து ஒன்றில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நபர் ஒருவர், முன்தினம் மதியம் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பூஸ்ஸ ருபில்வத்தையை சேர்ந்த 44 வயதுடைய தியாதுர பிரசன்ன என்ற வெவதெணியே சுட்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்
பொலிஸ் விசாரணைகளுக்கமைய, இவர் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என தெரியவந்துள்ளது. அத்துடன், அவருக்கு எதிராக இராணுவ வீரர் ஒருவரை கொலை செய்தமை, இரட்டைக் கொலைக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக் குற்றச்சாட்டுக்கு தான் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படலாம் என்ற மனவேதனையின் காரணமாகவே இவர் இவ்வாறு பேருந்தில் பாய்ந்து உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்திக்கின்றனர்.
இவர் முதலில் முச்சக்கர வண்டியில் பூஸ்ஸ ரயில் நிலையத்திற்கு வந்து, ரயில் வருகிறதா என பதற்றத்துடன் விசாரித்துள்ளார். அங்கு ரயில் தாமதமாகும் என்பதை அறிந்துள்ளார்.
அதன் பின்னர் முச்சக்கர வண்டியில் காலி வீதிக்கு வந்து, தனது கையடக்கத் தொலைபேசியை முச்சக்கர வண்டி ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டு, திடீரென கொழும்பில் இருந்து காலி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றின் பாய்ந்துள்ளார்.
பொலிஸாரால் பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் கராப்பிட்டிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்