பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொருவர் மரணம்: எழுந்துள்ள சர்ச்சை
பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொருவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்படும் சந்தேக நபர்களின் மரணங்கள் தொடர்பில் சர்ச்சை நிலை எழுந்துள்ள பின்னணியில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.
கொபேகனே, பத்தேகம பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்பட்டு கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் காவலில் இருந்தபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 25ம் திகதி, கிராமவாசிகளால் பிடிக்கப்பட்ட இந்த சந்தேகநபர் கோபேகனே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் இரண்டு நாட்களாக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு குறித்த சந்தேகநபர் நிகவெரட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்த 5 கிராமவாசிகளை கோபேகனே பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கிராமவாசிகளின் உறவினர்கள் பொலிஸார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
சந்தேகநபரைக் கைது செய்து மரத்தில் கட்டிய ஒரு மணி நேரத்திற்குள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, எவ்விதக் காயமுமின்றி அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
சிலவேளை கிராமவாசிகளால் அவர் தாக்கப்பட்டிருந்தால், அவர் உயிரிழப்பதற்கு முன்பே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உயிரிழந்த நபர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவது குறித்து பொலிஸாருக்கு ஏற்கனவே பலமுறை முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், அப்போது "சந்தேகநபரைக் பிடித்து செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு" பொலிஸாரே அறிவுறுத்தியதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பிரதேசவாசிகள் உயிரிழந்தவரை தாக்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.