சக்கர நாற்காலி ஊடாக இலங்கை முழுவதும் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கும் இளைஞன்
மாற்றாற்றல் கொண்ட இளைஞர் ஒருவர் சக்கர நாற்காலி ஊடாக இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார்.
நாட்டின் சுதந்திர தினத்தையொட்டியும்,சில கோரிக்கைகளை முன்வைத்தும் குறித்த இளைஞன் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வவுனியா- சூடுவந்தகுளம் பகுதியை சேர்ந்த வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி என்பவரே இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை மன்னாரில் இருந்து நாளை (20) ஆரம்பிக்க உள்ளார்.
சுற்றுப்பயணம்
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டும் ,இலங்கை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகள் மனிதாபினான உதவிகளை மேற்கொண்டவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட உள்ளது.

மேலும் இலங்கை மக்கள் அனைவரும் அனர்த்தத்தின் போது எவ்வித வேறுபாடுகள் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இலங்கை நாட்டு மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், சமூக நல்லெண்ணத்தையும் நோக்காக கொண்டு குறித்த பயணம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மேலும் படித்த மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புகள் இன்றி முடங்கியுள்ளனர்.அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து குறித்த பயணம் மன்னாரில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.
கோரிக்கை
இலங்கை முழுவதும் சுமார் 1500 கிலோ மீற்றருக்கும் அதிகமான கடற்கரையோரமாக குறித்த பயணம் முன்னெடுக்கப்பட உள்ளது.

எனவே மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த இளைஞன் தனது பயணத்தின் நோக்கத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.