கஜமுத்துக்களுடன் விசேட அதிரடிப் படையினரால் ஒருவர் கைது (Photos)
சட்டவிரோதமான முறையில் கஜமுத்துகளை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அம்பாறை - பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அறுகம்பை பிரதேசத்தில் நேற்று முன்தினம் சந்தேகநபர் தனியார் விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கஜமுத்துக்களை விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினர் சூட்சுமமான முறையில் சந்தேக நபருடன் உரையாடி கைது செய்துள்ளனர்.
இதன்போது விசேட அதிரடிப்படையினரின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, அம்பாறை வலயக் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதிரா ஆகியோரது அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட கட்டளை அதிகாரி டிசி வேவிடவிதான வழிகாட்டலில் பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.சி.டி.ஏ ரத்நாயக்க தலைமையிலான எச்.பி.ஜீ.கே.நிஸங்க (IP), எஸ்.பி.பண்டார (SI) உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து யானை கஜமுத்துக்கள் ஏழும், சிற்பி முத்து ஆறும் என்பன கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



