போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
போலி வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(12.9.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான அந்த சந்தேக நபர் போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்காக ஹட்டன் நகருக்கு வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கொழும்பை சேர்ந்த தனது மைத்துனர் இந்த வெளிநாட்டுப் பணத்தாள்களைத் தன்னிடம் கொடுத்ததாகவும், அவை போலி நாணயத்தாள் என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்த சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இந்த சோதனையின் போது, சந்தேக நபரிடமிருந்து 9 போலி 200 யூரோ பணத்தாள்கள் மற்றும் 7 போலி 100 யூரோ பணத்தாள்கள் உட்பட 16போலி வெளிநாட்டுப் பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலி பணத்தாள்கள் குறித்த மேலதிக விசாரணைக்காக இந்த வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்று ஹட்டன் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

