மின்கட்டணத்தில் 10 கோடி ரூபாய் மோசடி: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
மின்கட்டணம் செலுத்துவதாக கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 கோடி ரூபாய் மோசடி
கைது செய்யப்பட்ட இளைஞர் கசினோ களியாட்ட விடுதிக்கு வருகை தரும் வர்த்தகர்களிடம் மின் கட்டணத்தை செலுத்துவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.
குறித்த இளைஞன் கொழும்பில் உள்ள பிரபல களியாட்ட விடுதி ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இராணுவ விசேட அதிரடிப்படையினரிடம் இருந்து தப்பிச் சென்றவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
24 வயதுடைய இந்த இளைஞர் கசினோ விளையாட்டுகளுக்கு அதிக அடிமையாக இருந்துள்ளதுடன் இணையதளங்களை ஹேக் செய்வது எப்படி என்பதை அவரே கற்றுக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, இலட்சக்கணக்கான ரூபா மின்சாரக் கட்டணம் பெற்றவர்களை குறிப்பிட்ட கையடக்கத் தொலைபேசி விண்ணப்பம் மூலம் செலுத்தினால் 20 சதவீதம் தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என கூறி மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல தரகர்களைக் கைது செய்யும் நடவடிக்கை
சந்தேகநபர் இணையம் மூலம் பணம் பெற்று மின்கட்டணத்தை செலுத்தியதை சரிபார்க்கும் வகையில், மின்சார வாரியத்தின் கட்டணத்தை நிகழ்நிலையில் செலுத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணக்கை ஹேக் செய்துள்ளார்.
மின் வாரியத்தின் தரவுதளத்திலும் கட்டணம் செலுத்தப்பட்டதாக புதுப்பிக்கப்பட்டாலும், அதற்கு பணம் மாற்றப்படவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபருடன் தொடர்புடைய மேலும் பல தரகர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் மோசடி செய்த பணத்தில் கசினோ விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
