மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத தேயிலை தூள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
மட்டக்களப்பு - மாமாங்கம் பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி மனித பாவனைக்கு உதவாத தேயிலை தூள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், 600 கிலோகிராம் தேயிலைத் தூள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் கொண்ட குழுவினர் சம்பவ தினமான நேற்று மாமாங்கம் பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டைச் சுற்றிவளைத்துச் சோதனையிட்டுள்னர்.
இதன்போது அனுமதிப்பத்திரமின்றி சிலோன் தேயிலை என்ற பெயரில் மனித பாவனைக்கு உதவாத தேயிலை தூள்களை விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தேயிலைத்தூள் எங்கிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கைப்பற்றப்பட்ட தேயிலைத்தூளின் மாதிரி கொழும்பிற்கு பகுப்பாய்வுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




