சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுப்பட்ட ஒருவர் கைது (Video)
சட்டவிரோதமான முறையில் காட்டினை அழித்து முதிரை மரக்குற்றிகளை கடத்திய ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பறயனாலங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பறயனாலங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீலியாமோட்டை பகுதியில் முதிரை மரக்குற்றிகள் வெட்டப்படுவதாக கிடைக்கபெற்ற தகவலுக்கமைய குறித்த பகுதியில் இன்று (08) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளதுடன் சுமார் இரண்டு ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதியில் இருந்த முதிரை மரங்கள் மற்றும் பெறுமதியான மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் அரசுக்கு சொந்தமான அந்த காணியினை அபகரிக்கும் நோக்குடன் கஜூ மரங்களையும் அங்கு நாட்டியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவ்வாறான நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




