மாலைதீவு - இலங்கை ஜனாதிபதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நேற்று மாலை மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளன.
மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு, மாலைதீவு ஜனாதிபதி மகத்தான வரவேற்பளித்தார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகள்
ஜனாதிபதி அநுரகுமார விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு இட்ட பிறகு, இரு நாடுகளின் தலைவர்களும் உத்தியோகபூர்வ புகைப்படம் பிடிக்கும் நிகழ்வில் இணைந்து கொண்டனர். அதன் பின்னர், ஜனாதிபதிக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
அதன்படி, மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொர்பான ஒப்பந்தம் என்பன பரிமாறப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் மாலைதீவு மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகளிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குற்றங்களைக் கையாள்வதில் பரஸ்பர சட்ட உதவி வழங்குவதை முதலாவது ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகவல் மற்றும் ஆவண பரிமாற்றம்
இரண்டாவது ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் இடையில் இராஜதந்திர பயிற்சி அளிப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையே தகவல் மற்றும் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தங்களை மாலைதீவு சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் மற்றும் இலங்கை சார்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு ஆகியோர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டனர்.









