மாலைதீவை இலவச வலைக்குள் வீழ்த்தும் சீனா
இந்திய வீரர்களை வெளியேற்றுவதற்கு கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாலைதீவுக்கு இராணுவ உதவி வழங்க சீனா புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, சீனாவின் இராணுவ உதவியை இலவசமாக வழங்குவது மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான இந்த ஒப்பந்தத்தில், மாலைதீவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது காசன் மவுமூன், சீனாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஜாங் பாவ்கன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளதாக மாலைதீவு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.
எனினும் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல்
மாலைதீவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்திய ஆதரவு ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் முகமது சோலி தோல்வியடைந்தார்.
அவரை பிஎன்பி கட்சியை சேர்ந்த முகமது முய்ஸு வீழ்த்தி வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
இந்த முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டதோடு சீனா ஆதரவாளராகவும் இருந்து வந்துள்ளார்.
இவர் தனது தேர்தல் பிரசாரத்திலேயே தான் வென்றால் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றுவேன் என்று கூறி பிரசாரம் செய்து வாகை சூடியுள்ளார்.
அதேபோல் வெற்றி பெற்ற அவர் அங்குள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேறும்படி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |