மட்டக்களப்பில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த மலேசிய பெண் கைது
மட்டக்களப்பு - அம்பிளாந்துறை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் விசா காலாவதியான நிலையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த மலேசியப் பிரஜையான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், நேற்று (18) இரவு 8.30 மணியளவில் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை பிள்ளையார் கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் மலேசிய நாட்டுப் பெண் ஒருவர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்டுப் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசா காலம்
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் கடந்த 2026.05.10 ஆம் திகதி சுற்றுலா விசாவில் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, அம்பிளாந்துறைப் பிரதேசத்திலுள்ள தனது நண்பர்களின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது தவறி விழுந்ததில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டமையால், அதற்காகத் தொடர் மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது சுற்றுலா விசா காலம் கடந்த 2026.09.08 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள போதிலும், உடல்நலக் குறைவு காரணமாக உரிய நேரத்தில் நாடு திரும்ப முடியாத நிலையில் அவர் விசா காலத்தை நீடிக்காது அங்கேயே தங்கியிருந்துள்ளார்.
இதனை அறிந்த சிலர் 119 அவசர இலக்கத்திற்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மலேசியப் பெண்ணை நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.