மலையகம் பல்கலைக்கழக விடயம் சாத்தியமின்றி போயுள்ளது: இராமன் செந்தூரன்
மலையகத்தின் நீண்ட காலமாக பேசும் பொருளாக இருந்து வந்த மலையகம் பல்கலைக்கழகம் கொட்டகலை கொமர்சல் பகுதியில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் அந்த பல்கலைக்கழகம் அந்த இடத்தில் தற்போது அமைவதற்கான எந்த சாத்தியகூறுமில்லை என மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு மலையக மக்கள் சக்தி ஒழுங்கு செய்திருந்த மேதின நிகழ்வு மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டத்தில் நேற்று நடைபெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கல்வி வளர்ச்சி
“மலையகம் மாற்றம் பெற வேண்டுமானால் அது கல்வியில் தான் உள்ளது என்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அந்த கல்வி வளர்ச்சிக்கு மலையக கட்சிகள் எந்த அளவுக்கு உதவி புரிகின்றனர் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
பெரும்பான்மை பகுதியில் காணப்படுகின்ற பாடசாலைகளில் அனைத்து வளங்களும் காணப்படுகின்றன. ஆனால் எமது பிரதேச பாடசாலைகளில் அவ்வாறான ஒரு நிலை காணப்படுகின்றதா?
மலையக தொழிற்சங்கங்கள் இன்று தோட்டத்தொழிலாளர்களிடமிருந்து சந்தா பணம் பெறப்படுகின்றன.
அவர்கள் நினைத்திருந்தால் பல தொழிலாளர்களின் பிள்ளைகளை பட்டதாரியாக்கியிருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செய்யப்போவதில்லை ஏனென்றால் அதை வைத்துதான் அரசியல் செய்யலாம்.
நான் அப்படியல்ல என்னால் முடிந்தளவு கல்விக்காக செலவிடுவேன் எனக்கு ஒரு தோட்டத்தில் 10 அங்கத்தவர் இருந்தால் அந்த 10 பேரினது காசை கல்விக்காக செலவிடுவேன்.