இலங்கையை ஆண்ட அரசுகளால் மோசமாக சுரண்டப்பட்ட மலையக மக்கள்! திருகோணமலையிலிருந்து ஆதரவு
பாதிக்கப்பட்ட ஒரு தேசிய இனமாக சக தேசிய இனமொன்றின் கோரிக்கைகளை ஆதரித்து நிற்க வேண்டிய வரலாற்று கடமையை நாம் அனைவருமாக ஏற்றுக் கொள்வதாக திருகோணமலை மாவட்ட சிவில் சமூகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இருநூறு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நீண்ட, நெடிய பயணத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு விடயங்கள் "மலையகம் 200" என்ற தொனிப் பொருளில் இடம்பெற்று வருகின்றது.
"மாண்புமிகு மலையகம்" என்ற நடைபயணம் வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட தலைமன்னாரில் இருந்து மலையகம் நோக்கி இடம்பெற்று தற்பொழுது நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் திருகோணமலை மாவட்ட மக்கள் சார்பாக திருகோணமலை மாவட்ட சிவில் சமூகங்களின் கூட்டமைப்பு இன்றைய தினம் (12.08.2023) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் தமது ஆட்சிக்குட்பட்ட மக்கள் கூட்டத்தை ஒரு இடத்திலிருந்து தொழில் தருவதாக ஏமாற்றி இன்னுமொரு இடத்திற்கு அழைத்து வந்த அவலம் நிறைந்த பயணத்தை அம்மக்கள் நடந்து வந்த வழி வழியே நடந்து கடக்கும் மலையகம் 200 நடைபயணத்தை நாம் ஆதரித்து நிற்பதுடன் அம்மக்களுடன் இணைந்தும் பயணிக்கிறோம்.
எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளுடன் இந்தத்தீவை அடைந்த மக்களை சுதந்திரத்தின் பின்பு மாறி மாறி ஆண்ட சிங்கள அரசுகள் இன்னும் மோசமாக சுரண்டியதையும் ஒடுக்கியதையும் நாம் அறிவோம்.
இந்த நாட்டிற்கு தமது கடும் உழைப்பின் மூலம் அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் மலையக மக்கள் இப்பேரணி ஊடாக, அம் மக்களை இலங்கை பேரினவாத அரசையும் அதன் ஒடுக்கும் பேரினவாத சிந்தனையையும் ஏனைய உழைப்பை சுரண்டும் வர்க்க சுரண்டல் முதலாளிகளையும் நோக்கிய கோரிக்கைகளுக்கான தார்மீக ஆதரவை வழங்கி அம்மக்களின் அத்தனை போராட்டங்களிலும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது எமது கடமையும் பொறுப்புமாகும்.
மலையகம் 200 நடைபயண அணி முன்வைத்திருக்கும் பிரதான கோரிக்கைகள் பின்வருகின்றன. மலைநாட்டின் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக இந்த நாட்டிற்கு முதன்முதலில் அழைத்து வரப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் குழுக்களின் பயணத்தின் தடங்களில் அம் மக்கள் மீளவும் அடியொற்றி நடந்து வந்து இன்று மாத்தளையை அடைகின்றனர்.
பல ஆண்டுகளாக, மன்னாரில் தரையிறங்கிய பல்லாயிரக்கணக்கானோர் மாத்தளை நோக்கிய ஆபத்தான பயணத்தை கால் நடையாகவே மேற்கொண்டனர். அவர்கள் நோய்களை எதிர்கொண்டனர், காடுகளைத் துப்புரவு செய்து பயணித்தனர் அத்துடன் காட்டு விலங்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டனர்.
அவர்களில் பலர், (சுமார் 40 வீதம் வரையிலானோர்) பயணிக்கும் வழியிலேயே மரணமடைந்ததுடன் அவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டனர் அல்லது அவர்களது உடல்கள் அகற்றப்பட்டன. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடினமான பயணத்தை மேற்கொண்ட முதல் தலைமுறையினர் பற்றி சிந்திக்கவும் அவர்களுடனான தொடர்பினை மீள ஏற்படுத்துவதற்குமான இந்த யாத்திரையில் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு நடைபயண அணியினரின் கோரிக்கையை நாம் அனைவரும் ஏற்று அவர்களுடன் இணைகின்றோம்.
'மலையக எழுச்சிப் பயணம்' - எதிர்காலத்தைப் பற்றியதுமாகும் - இது இலங்கையின் சுதந்திரமான மற்றும் சமமான பிரசைகளாக மலையகத் தமிழ் சமுதாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையைப் பற்றியது. 200 வருடங்களுக்கு முன்னர் அவரகள் இந்த நாட்டிற்கு வந்ததில் இருந்து அவர்களது இருப்பு போராட்டமாகவே காணப்பட்டு வருகின்றது.
இலங்கையின் தனித்துவமான அடையாளம் கொண்ட மக்களாக அங்கீகரிக்கவும் மற்றும் ஏனைய சக சமூகங்களுக்கு இணையாக நடாத்த வேண்டும் என தொடர்ந்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களிடம் அவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த வேண்டுகோள்களிலிருந்து இந்தக் கோரிக்கைகள் எழுகின்றன.
இது ஏனைய சக சமூகங்களுக்கு இணையாக சுதந்திர இலங்கையின் ஒரு மக்கள் கூறு என்னும் அடையாளத்திற்கான இந்தச் சமுதாயத்தின் போராட்டங்களை எதிரொலிக்கின்றது. 'மலையக எழுச்சிப் பயணம்' - என்பது சக சகோதர பிரசைகளுடனான ஓர் உரையாடலாகும்.
சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சக சகோதர பிரசைகள் மத்தியில் மலையகத் தமிழ் சமுதாயத்தின் வரலாறு, போராட்டங்கள், சாதனைகள், பங்களிப்பு, தற்போதைய சமூக பொருளாதார- அரசியல் அந்தஸ்து மற்றும் அபிலாசைகள் ஆகியவை பற்றிய அடிப்படை மட்டத்திலான புரிதலை ஏற்படுத்துவதும் இந்தப் பயணத்தின் இலக்காகும்.
தமது வருகையின் 200 ஆவது வருடப் பூர்த்தியை நினைவுகூரும் மலையகத் தமிழ் சமுதாயத்தினர், முழுமையான மற்றும் சமமான பிரசைகளாக, இலங்கை வாழ்வில் முழுமையாகவும் அர்த்தபூர்வமாகவும் பங்கேற்பதற்காக இக்கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணம் இச்சந்திப்பின் சந்தர்ப்பமாக அமைவதுடன் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஓர் ஆதரவுப் பயணமாகவும் அமையும்.
இலங்கையின் அர்த்தமுள்ள பிரஜைகளாவதற்கு, மலையகத் தமிழ் மக்கள் பின்வருவனவற்றை கோருகின்றனர்.
• தமது வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல்
• ஏனைய சக சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகரித்தல்
• தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக இச்சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை வாழ்விற்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம்.
• வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பாதுகாப்பான உரிமைக்காலத்துடனான காணி உரிமை
• தமிழ் மொழிக்கு சமமான பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து
• அரசாங்க சேவைககளை சமமாக அணுகுவதற்கான வாய்ப்பு
• பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல்
• வீட்டுப் பணியாளர்களின் முழுமையான பாதுகாப்பு
• மலையகக் கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்துதல்
• அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை வழங்கும் ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு.
பாதிக்கப்பட்ட ஒரு தேசிய இனமாக சக தேசிய இனமொன்றின் கோரிக்கைகளை ஆதரித்து நிற்க வேண்டிய வரலாற்று கடமையை நாம் அனைவருமாக ஏற்றுக் கொள்வதுடன் சில தமிழ் அரசியல் தலைமைகளால் இழைக்கப்ட்ட தவறுகளுக்காக வருந்துவதுடன் வடக்கு, கிழக்கில் வாழும் மலையக பாரம்பரியத்தைக் கொண்ட மக்களின் சகவுரிமை சக வாழ்விற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்னும் உறுதிப்பாட்டுடன் தமது உரிமைகளை வென்றெடுக்க போராடும் மலையக தமிழ் மக்களுடன் உணர்வு பூர்வமாக ஒன்றித்து பயணிப்பதற்கான திடசங்கற்பத்தை வெளிக்காட்டி திருகோணமலை மாவட்ட மக்கள் சார்பாக இவ்வறிக்கையை வெளியிடுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.