போதைப் பொருள் குறித்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை வேகமாக வழங்க நடவடிக்கை
போதைப்பொருள் தொடர்பிலான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை 3 மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை போதைப்பொருளின் நிகர எடை 10 கிராமிற்கு மேல் இருந்தால் பிணை பெறுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச புதிய சட்டத் திருத்தத்தின்படி, கைது செய்யப்படும் போது போதைப்பொருளின் நிகர எடை 100 கிராமிற்கு குறைவாக இருந்தால் மேல் நீதிமன்றத்திலேயே பிணை பெற வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
திணைக்களத்தில் நிலவிய 118 இரசாயனப் பகுப்பாய்வாளர் வெற்றிடங்களில் சுமார் 70 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் இரவு 10.00 மணி வரை தீவிரமாகப் பணியாற்றி அறிக்கைகளை விரைவுபடுத்துவதால், ஆய்வக அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் கணிசமாகக் குறையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் டி.என்.ஏ பரிசோதனைகளின் தரத்தை மேம்படுத்த தேவையான அத்தியாவசிய ஆய்வக உபகரணங்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி அஸுசா குபோட்டாவினால் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் காமிணி பெரேராவிடம் கையளிக்கப்பட்டன.