வரட்டு மனோபாவத்தில் செயற்படும் பெரும்பான்மை அரசு: எழுந்துள்ள கண்டனம்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வின் அடிப்படை தத்துவத்தை கூட புரிந்து கொள்ளாத ஒரு வரட்டு மனோபாவத்தில் இன்றும் பெரும்பான்மை அரசு பயணிக்கிறது என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி குறிப்பிட்டுள்ளார்.
இன்று (17.05.2024) அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பெரும்பான்மை இனம், ஆட்சி அதிகாரங்களை கையகப்படுத்தி தமிழ் தேசிய இனத்தின் இருப்பிற்கும் உயிர்வாழ்தலுக்கான உரிமைக்கும் தனது இராணுவ மேலாண்மையை பயன்படுத்தி கேடு விளைவித்திருந்தது.
அரசியல் விடுதலை
அதன் விளைவாக தமிழர் தரப்பு அகிம்சாவழி போராட்டமும் தொடர்சியாக ஓர் ஆயுதவழி போராட்டமும் தமிழினத்தின் மீது வலிந்து திணிக்கப்பட்டது.
போரின் உச்சமாக கடலையும் பெரும் வெளியையும் சாட்சியாக வைத்து தரை, கடல் மற்றும் ஆகாயமார்க்கங்களாக தனது இராணுவ வல்லாண்மையினை பயன்படுத்தி நாட்டின் பூர்வீக குடிகளான தமிழர்களை இனவழிப்பு செய்து தனது கோர முகத்தினை உலகிற்கு காட்டி நின்றது.
புதைகுழிகள் இன்றி புதைக்க எவருமின்றி மாண்டுபோன ஒரு தேசிய இனத்தின் துயரத்தை அரசியல் விடுதலையாக பிரசவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டென்பதை நாம் திடமாக நம்புகிறோம்.
இப்படியான மிகவும் சலனத்துக்குரிய இடர்பாடுகள் மிகுந்த திருப்பு முனையில் பயணிக்கும் தமிழ் அரசியல் வகிபங்காளர்கள் ஒன்றிணைந்நு ஏகோபித்த ஓர் அரசியல் செயற்பாடொன்றின் மூலமாகவே சமகால சவால்களுக்கு முகம்கொடுக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |