பெரும்பான்மை இனநாயக டொனமூர் யாப்பை அரசியல் தீர்வாக முன்வைக்கும் ரணில்
கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத ஐக்கிய தேசியக்கட்சி தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனத்தை பெற்றது.
அந்த ஆசனத்தை பெற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த பலமற்ற ஒரு அரசியல் தலைவராக காணப்படுகிறார்.
அத்தகைய ஒருவரை இலங்கையின் பிரதமராக சிங்கள ஆளும் உயர்குழாம் நியமித்திருப்பது வினோதமானது.
ஆளும்குழாம் என்பது பௌத்த மகாசங்கத்தையும், சிங்கள உயர்சாதி அரசியல் சக்திகளையும், கூடவே இராணுவத்தையும் ஒன்று திரட்டிய அணி என்பதாகும்.
இந்த அரசியல் வினோதத்தின் பின்னால் பாரிய நாசகார, சதிகார, ஏமாற்று அரசியல் உள்நோக்கங்களும், உள்ளோட்டங்களும் உள்ளன.
இலங்கை இனப்பிரச்சினைக்கு ஜூன் மாதம் தீர்வு காணப்படும் என்று இலங்கை அரசு இந்தியாவுக்கு உறுதியளித்திருந்தது. ஜனாதிபதி கோட்டாபயவினால் ஜூன் மாதம் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும்.
அந்த அரசியல் யாப்பில் தமிழர்களுக்கான தீர்வு திட்டம் வரையப்பட்டு உறுதிப்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி என்ற பாரியகுண்டு வெடித்தது. அது மக்களை வீதியில் இறங்கி போராட வைத்து பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.
அந்த நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பம் முகம் கொடுப்பது கடினமாகிவிட்டது. இந்நிலையில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை பாதுகாக்கவும், சிங்கள ஆளும் வர்க்கத்தை பாதுகாக்கவும், இனவாத அரசியலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் ஏற்ற ஒரு பாதுகாவலனாக ரணில் விக்ரமசிங்கவை சிங்கள ஆளும் உயர்குழாம் தெரிவு செய்து பிரதமராக்கியுள்ளனார்.
ஆகவே சிங்கள ஆளும் வர்க்கத்தின் எந்த ஒருவர் மீதும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படப் போவதில்லை. இனப்படுகொலை, போர்க்குற்றம் என்ற குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப் போவதில்லை. அது தொடர்புடையவர்கள் மீதும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படப் போவதுமில்லை.
மாறாக அவர்களைப் பாதுகாத்து மேலும் இனவாதத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய நபராகவும், பொருளாதார நெருக்கடியில் இருந்தும், வெளியுறவுக்கொள்கை நெருக்கடியிலிருந்தும், சிங்கள பெருந்தேசியவாதத்தை மீட்பாராக சிங்கள ஆளும் வர்க்கம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் நியமித்துள்ளார்கள்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழ் எந்தவகையான ஒரு தீர்வையும் ஒருபோதும் எட்டிவிட முடியாது என்பதே நிதர்சனமான உண்மையாகும். அத்தகைய சூழலில் மீண்டும் ஒற்றையாட்சியை வலியுறுத்தி ரணில் விக்ரமசிங்க பேசியுள்ளார்.
இந்த வாரம் ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனத்தில் நடந்த கூட்டத்தில் இலங்கை எதிர் நோக்கியிருக்கும் இரட்டை பொருளாதார நெருக்கடி என்ற தலைப்பில் பேசுகின்ற போது டொனமூர் அரசியல் யாப்பில் இருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை தேட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பேச்சில் டொனமூர் அரசியல் யாப்பு பெரும்பான்மை சிங்கள இனத்தின் கையில் அரசியல் அதிகாரத்தை வழங்கியது. இதனைக் கண்டு தமிழர்கள் பயந்தார்கள். அதற்கு எதிராக பேசினார்கள். சத்தம் போட்டார்கள். கத்தினார்கள். கத்திக் கொண்டே இருந்தார்கள்.
ஆனாலும் நாங்கள் எங்கள்பாட்டில் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அனைத்தையும் எங்களுக்குச் சார்பாகவே செய்து முடித்தோம். அரசியல் யாப்பில் எங்கள் தேவைக்கேற்றவாறு விகிதாசாரப் பிரதிநிதித்துவம் வரைக்கும் அனைத்து மாற்றங்களையும் எம் விருப்புக்கு ஏற்றவாறு செய்து நிறைவேற்றிவிட்டோம்.
பிரித்தானியர் வழங்கிய டொனமூர் அரசியல் யாப்புத்தான் எங்களுடைய அரசியல் யாப்பு மரபிற்கு அடித்தளமாகும். எனவே இன்றுள்ள அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக டொனமூர் அரசியல் யாப்பின் அடிப்படையிலான நிர்வாகக்குழு முறைமையை பரிசீலிப்பதுதான் நல்லது எனக் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் காலனித்துவ ஆட்சி காலத்தில் துலாம்பரமாக இனவாதத்தை தோற்றுவித்த காலமாக டொனமூர் அரசியல் யாப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தையும் அது தோற்றுவிக்கப்பட்ட காலத்தையுமே கொள்ள வேண்டும். அதனை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து பார்க்கவும் வேண்டும்.
டொனமூர் அரசியல் யாப்புத்தான் பௌத்த சிங்கள பெரும்பான்மை இனவாதத்தை தோற்றுவித்த, ஊட்டி வளர்த்த, ஸ்தாபிதம் அடையச்செய்த கருவியாகும். ஒற்றையாட்சி முறைக்கு உட்பட்ட நிர்வாகக்குழு முறைமையை கொண்டு சிறுபான்மையினரை அடக்கி, அழித்தொழித்த டெனமூர் அரசியல் யாப்பை மீண்டும் பரிசீலிப்பது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுவது படுபயங்கரமானது.
எனவே எந்த ஒரு சிங்களத் தலைவர்களும் தமிழர் பிரச்சினைக்கு நீதியான தீர்வை நோக்கி நேர்மையாக, இதயசுத்தியுடன் சிந்திக்க தயாரில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
இக் கூற்றின் மூலம் இனவழிப்பு திட்டத்தின் இறுதிகட்டத்தை எட்டுவதற்கும், மேலும் இனவாதத்தை வளர்ப்பதற்கும், ஏனைய இனத்தினரை மென்மேலும் ஒடுக்குவதற்கும் அவர் புதிய பாதை ஒன்றை திறக்க முனைகிறார் என்பதாக அமைகிறது. இது இலங்கையில் வாழும் தமிழ்த்தேசிய இனத்தின் கழுத்தை நோக்கி வீசப்படும் கூர்வாளின் அபாயச் சங்கொலியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
1920களில் தமிழர் மகாசபை, யாழ்ப்பாண வாலிபர் சங்கம் போன்றவற்றின் நடவடிக்கைகளும், 1927ம் ஆண்டு மகாத்மாகாந்தியினுடைய இலங்கை விஜயமும், அவர் யாழ்ப்பாணம் சென்று உரையாற்றியமையும். காந்தி குழுவினர் வந்திறங்கிய அதே கப்பலில்தான் டொனமூர் அரசியல் குழுவினரும் வந்திறங்கினர்.
அப்போது காந்தியை மேளதாளத்துடன் பெருமளவிலான தமிழ் மக்கள் ஒன்று திரண்டு பிரமாண்டமான வரவேற்பு நிகழ்வை நடாத்தினர். அதே நேரத்தில் டொனமூர் குழுவினர் வரவேற்கப்படாமல் உதாசீனப் படுத்தப்பட்டனர். இவைகள் தமிழ்மக்கள் இந்திய காங்கிரசுடன் இணைந்து விடுவார்கள் என்ற அச்சத்தை பிரித்தானியருக்கு ஊட்டியது.
எனவே தமிழர்களை அடக்க வேண்டுமானால் பெரும்பான்மைச் சிங்கள மக்களை அரவணைக்க வேண்டும் என்ற முடிவுக்கு பிரித்தானியரை தள்ளியது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவுதான் 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புத் திருத்தச் சட்டம் ஆகும்.
காலனித்துவ ஆதிக்க காலத்தில் இலங்கையையும், இந்தியாவையும் வெவ்வேறு
நிர்வாக அலகின் கீழ் வைத்திருக்கவே பிரித்தானியா தொடர்ந்தும் விரும்பினர். புவிசார்
அரசியலில் இலங்கையை தனித்துவமாக கையாள விரும்பிய பிரித்தானியர்
இந்தியாவுக்கான நிர்வாக முறைமை ஒருவிதமாகவும், இலங்கைக்கான நிர்வாக
முறைமை இன்னொரு வகையாகவும் உருவாக்கி நடைமுறைப்படுத்தி இருந்தனர்.
புவிசார் அரசியலில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர ஸ்தானத்தில் இலங்கை அமைந்துள்ளது. அதுவே இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்த வாய்ப்பாக இருக்கிறது.
இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்தினால் உலகளாவிய கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியும். அவ்வாறே இந்த உலகத்தையும் கட்டுப்படுத்த முடியும். அத்தகைய ஒரு இராணுவ கேந்திர தன்மையை இலங்கை கொண்டிருப்பதனால்தான் வல்லரசுகள் இலங்கையில் காலுான்றவும், இலங்கையில் செல்வாக்குச் செலுத்தவும் போட்டோ போட்டி போடுகின்றன.
இதனை பிரான்சின் சக்கரவர்த்தி நெப்போலியன் திருகோணமலைத் துறைமுகத்தை என் கையில் தாருங்கள் நான் இந்த உலகை ஆளுவேன் என்றார்.
இங்கு திருகோணமலைத் துறைமுகம் என்பது ஒரு நிர்வாக மையப்புள்ளி அல்ல. அது இந்து சமுத்திரப் பிராந்தியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான, கண்காணிப்பதற்கான ஒரு இராணுவ கேந்திர தன்மை வாய்ந்த இடம் என்பதுவேயாகும்.
எனவேதான் இலங்கையை தனியான நிர்வாக அலகின் கீழ் வைத்துக் கொண்டு இந்தியாவையும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தையும் தமது தொடர் கண்காணிப்புக்குள்ளும், கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்திருப்பதுதான் பிரித்தானியரின் கடல்சார் புவிசார் கண்ணோட்டத்திலான பாதுகாப்பு வியூகமாகும்.
இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து கொண்டுதான் இலங்கையின் நிர்வாகம், கல்வி, அபிவிருத்தி, தேர்தல்கள் போன்ற அனைத்தையும் வடிவமைத்தார்கள். அவ்வாறு காலனித்துவம் முடிவடைகின்ற காலத்தில் தனக்கு ஏற்றவாறு ஒரு நவ காலனித்துவத்தை தொடர்ந்து வைத்திருப்பதற்கு இலங்கை தனியான ஒரு நிர்வாக கட்டமைப்பாக இயங்க வேண்டும் என்பதையே பிரித்தானியர் விரும்பினர்.
இதனால்தான் இந்தியாவில் இருந்து 1204 கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள அந்தமான் தீவை இந்தியாவுடன் இணைத்தார்கள். ஆனால் இந்தியாவிலிருந்து 27 கிலோமீற்றர்கள் அருகாமையில் உள்ள இலங்கைத் தீவை தனிநாடாக உருவாக்கி விட்டுச்சென்றார்கள்.
இந்தப் பின்னணியில்தான் டொனமூர் அரசியல் யாப்பு இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை இதற்கு ஆதரவான ஒரு அரசியல் அதிகாரத்தை வழங்கக் கூடியதாக பிரித்தானியரால் உருவாக்கப்பட்டது.
அதுவரை காலமும் படித்த ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த வாக்குரிமை வாய்ப்பை மாற்றியமைத்து அனைவருக்குமான சர்வஜன வாக்குரிமையை வழங்கினார்கள். உலகில் இரண்டாவதாக சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட நாடாக இலங்கை இடம்பெறுகிறது.
பிரித்தானியாவில் 1926 ஆம் ஆண்டுதான் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இலங்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அதாவது 1929 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பு பரிந்துரையில் அனைத்து இலங்கை மக்களுக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. என்பதும் இங்கே கவனத்துக்குரியது.
ஏனெனில் படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை என்றிருந்தால் தமிழ் சமூகத்தினர் அன்றைய நிலையில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கு அண்மிக்கக்கூடிய சமமான வாக்குரிமையைப் பெறுவர் என்பதனால் அனைவருக்கும் சர்வஜன வாக்குரிமையை வழங்கியதன் மூலம் தமிழ் மக்களை அரசியல் அதிகாரம் பெற முடியாதவராக்கினர்.
இதன் மூலம் இலங்கை அரசியலில் முழுமையான அரசியல் அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைப்பதற்கான ஒரு நாசகார நோக்கம்தான் அன்று பிரித்தானியரிடம் இருந்தது. பிரித்தானியர்கள் ஜனநாயகம் என்ற போர்வையில் இலங்கைக்கு முதன் முதலாக அளிக்கப்பட்ட சர்வஜன வாக்குரிமை என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
சர்வஜன வாக்குரிமை என்பது மக்களுக்கான ஜனநாயக உரிமைதான். ஆனால் அந்த சர்வஜன வாக்குரிமையை தவறான கோணத்தில், தவறான எண்ணத்தில் இன்னொரு இனத்திற்கு கேடு விளைவிக்கக் வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இலங்கையில் பயன்படுத்தப்பட்டது என்பதுதான் துயரகரமானது.
மேலும் டொனமூர் அரசியல் யாப்பு அறிமுகப்படுத்திய நிர்வாக குழு முறையில் 7க்கும் 9 க்கும் இடைப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த நிர்வாக குழுக்களின் தலைவர்கள் மந்திரிகளாக்கப்பட்டனர்.
இலங்கையில் முதன் முதல் தனி சிங்களவர்களை கொண்ட மந்திசபை டொனமூர் காலத்திலேதான் உருவாக்கப்பட்டது. தனிச்சிங்கள மந்திரிசபையை ஜனநாயகத்தின் பேரால் காலனித்துவ காலத்திலேயே சிங்களவர்கள் செய்து காட்டினர் என்பதனை இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டும்.
1931 லிருந்து 1947 வரையான டொனமூர் அரசியல் யாப்பு நடைமுறையில் இருந்த காலத்தில் தான் தனிச்சிங்களச் சட்டம், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் போன்றவற்றிற்கான கருத்தியலும் நடைமுறைகளும் ஊட்டி வளர்க்கப்பட்ட காலமாகவும் அமைகின்றது.
அத்தகைய ஒரு இனவழிப்பு கருக்கொண்ட வலுவடைந்த ஒரு நாசகார அரசியல் யாப்பில் குறிப்பிடப்படும் நிர்வாககுழு முறைமையை இவ்வளவு பெரிய இனப்படுகொலை யுத்த அழிவுக்குப் பின்னரும் மீண்டும் பரிசீலிப்போம் என தற்போதைய பிரதமர் குறிப்பிடுவது இத்தகைய ஒரு பேராபத்தை நோக்கி இலங்கை சிங்கள பௌத்த இனவாதத் தலைவர்கள் பயணிக்க முற்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது.
மேலும் 1929ல் பலியிடப்பட்டு வெளியிடப்பட்ட டொனமூர் அரசியல் யாப்பு பரிந்துரையில் மாகாண சபை முறைமை பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் மாகாண மக்களின் விருப்புக்கு ஏற்ற வகையில் அந்த சபையை உருவாக்கலாம் என்பது அதன் சாராம்சம் ஆகும். ஆனால் அதில் எத்தனை மாகாண சபைகள் என வரையறுக்கப்படவில்லை.
எனவே தமிழர் தாயகத்தை ஒரு மாகாணசபையாகவும் சிங்கள மக்களின் பிரதேசத்தை ஒரு மாகாண சபையாகவும் உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் அந்த பரிந்துரையில் இருந்தது என்பதுவும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.
அதனை இப்போது நடைமுறைப்படுத்துவோம், அல்லது பரிசீலிப்போம் என பிரதமர் குறிப்பிட்டு இருந்தால் அவர் இதயசுத்தியுடன் நடக்க முற்படுகிறார், அல்லது தமிழ் மக்கள் சார்ந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்ட முற்படுகிறார் என்றுகூட கருத்தில் எடுக்க முடியும்.
ஆனால் அவர் அதனை சிந்தித்தும் பார்க்கவில்லை. மாறாக தமிழ் மக்களை அடக்குவதற்கு, அழிப்பதற்கு, ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட அந்த நிர்வாக குழு முறைமையை மாத்திரமே அவர் இங்கே பரிசீலிக்க முற்படுவது மிகமிக ஆபத்தானது. இது இன அழிப்பு சுற்றுவட்டத்தில் இரண்டாம் நச்சு வட்டமாக அமைவதையே கோடிட்டுக் காட்டுகிறது.
எனவே புதிதாக உருவாக்கப்பட இருக்கின்ற அரசாங்கம் என்பது ஒரு புதிய வளர்ச்சி இட்டுச் செல்லாமல் ஒரு நூற்றாண்டை எட்டுக்கின்ற, பிற்போக்குத்தனமான, தமிழ்மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு வழிகோலிய டொனமூர் அரசியல் யாப்பை நோக்கி விரிவடைந்து பின்னோக்கி செல்கிறது.
உலகளாவிய அரசியலில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மேன்மேலும் படிமுறை வளர்ச்சி அடைந்து கொண்டு செல்ல இலங்கையினுடைய அரசியல் யாப்பு படிமுறையாக தேய்மானம் அடைந்து பின் நோக்கி தொடர்ந்து செல்வதையே பிரதமர் உடைய கூற்றுக்கள் வெளிக்காட்டுகின்றன.
எனவே இலங்கையினுடைய பொருளாதார வீழ்ச்சியும் அரசியல் தேய்மானமும்
தொடர்ந்து அதிகரித்துக் செல்லக்கூடிய அரசியல் இயங்கு போக்கே இலங்கையில்
மீண்டும் தோற்றம் கொள்கிறது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
