கொழும்பில் நாளை வைத்தியர்கள் மாபெரும் போராட்டம்
மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட பல பிரதான கோரிக்கைகளை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை(10.11.2026) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
மருத்துவர்களின் குறைக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்குதல், உத்தியோகபூர்வ தங்குமிட வசதிகளில் நிலவும் கடுமையான பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் சேவை நேரத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள சங்கத்தின் அனைத்து மாவட்டக் கிளைகளின் பிரதிநிதிகளும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நேரில் பங்கேற்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தம்
எனினும், இந்தப் போராட்டம் வேலைநிறுத்தம் அல்லது பணிப்புறக்கணிப்பாக அமையாது என்றும், நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் வழமையான மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிச் சீராக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தமது நியாயமான கோரிக்கைகளுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசுகளிடம் தீர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடு தழுவிய ரீதியில் கடுமையான மேலதிக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.