நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தம்.. கடுமையாக சேதமடைந்துள்ள கடற்கரை பகுதிகள்
டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இலங்கையின் கடற்கரைப் பகுதியில் மொத்தம் 143.03 கிலோமீற்றர் தூரம் மாசுபட்டுள்ளதாக கடற்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த பாதிப்பை மீட்டெடுக்க சுமார் 5,280 மனித மணிநேரம் தேவைப்படும் என்று அதிகாரசபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
கழிவுகள்
கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கற்பிட்டி மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மண்சரிவு மற்றும் வீடுகளிலிருந்து வந்த கழிவுகள் ஆறுகள் மூலம் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு கடற்கரையில் குவிந்துள்ளன.

மேலும், பருவமழை காரணமாக இந்தியக் கடற்கரையிலிருந்து குப்பைகள் அடித்து வரப்பட்டமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
குவிந்துள்ள இந்தக் கழிவுகளை அகற்றும் பணி குறைந்தது மூன்று வாரங்கள் நீடிக்கும் என்றும், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் அதிகாரசபையின் 13 பிராந்திய அலுவலகங்களின் உதவியுடன் கழிவுகளை மறுசுழற்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடலின் அடிப்பகுதியில் குவிந்திருக்கக்கூடிய ஏனைய கழிவுகள் தொடர்பான அவதானிப்பு அறிக்கையொன்றை தயாரிக்கும் பணியிலும் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.