அரசியலில் திவால் நிலையை மறைக்கும் முயற்சியில் மைத்ரி: கத்தோலிக்க திருச்சபையின் குற்றச்சாட்டு
கர்தினால் மல்கம் ரஞ்சித், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியுதவிகளை வழங்கியுள்ளார் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு இயக்குனர் அருட் தந்தை ஜூட் கிரிசாந்த, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தனது அரசியல் வங்குரோத்து நிலையை மறைப்பதற்காக ஊடகங்களுக்கு முன்னால் இவ்வாறான கதைகளை உருவாக்கி வருவதாக ஜூட் கிரிஷாந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
பொய்யான அறிக்கை
மைத்திரிபால சிறிசேன இன்றைய நிலையில் அரசியல் வங்குரோத்து நிலையில் உள்ளார்.
எனவே, அவர் தனது அரசியல் திவால்நிலையை மறைக்க ஊடகங்கள் முன் இந்த பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் என்று கிரிசாந்த குறிப்பிட்டுள்ளார்.
கர்தினால் ரஞ்சித்தின் கீழ் பராமரிக்கப்படும் நலன்புரி அமைப்பான ‘சேத் சரண கரித்தாஸ்’ பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதியை செலவிட்டுள்ளது.
உங்கள் வலது கை செய்வதை உங்கள் இடது கை கூட அறியக்கூடாது, அதனால் நீங்கள் கொடுப்பது இரகசியமாக இருக்கும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனை உள்ளது. அதனால்தான் கத்தோலிக்க திருச்சபை, தாம் செய்யும் காரியங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதில்லை என்று ஜூட் கிரிஷாந்த மேலும் தெரிவித்துள்ளார்
முன்னதாக, கர்தினால் மல்கம் ரஞ்சித், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பெறப்பட்ட நிதியுதவி எதனையும் விநியோகிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (வியாழக்கிழமை) குற்றஞ்சாட்டியிருந்தார்
பொலன்னறுவையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தமக்கு எதிரான பெரும்பாலான நீதிமன்ற வழக்குகள் கர்தினால் ரஞ்சித்தின் செல்வாக்கின் கீழ் தாக்கல் செய்யப்பட்டவை என்றும் அவர் கூறியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |