மைத்திரியை விடுவித்த உயர் நீதிமன்றம்
புதிய இணைப்பு
ரோயல் பார்க் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய வழக்கில் இருந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய மைத்திரிபால சிறிசேன விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில், சர்ச்சைக்குரிய ரோயல் பார்க் கொலையாளியான ஜூட் ஷிரந்த ஜயமஹவுக்கு ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.
அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் அடிப்படையில் மைத்திரி வழங்கிய பொதுமன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்பில் விடுதலையான ஜூட் ஜயமஹ, நாட்டை விட்டும் தப்பிச் சென்றுவிட்டதால் அவருக்கு எதிரான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ள முடியவில்லை. எனினும் பொதுமன்னிப்பு வழங்கிய மைத்திரிக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீதான மேலதிக விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன் போது நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய மைத்திரிபால சிறிசேனவும் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
மைத்திரி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரர் உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட ஒரு மில்லியன் அபராதத் தொகையை செலுத்திவிட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
அதனையடுத்து மைத்திரியை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலதிக தகவல் - அனதி
முதலாம் இணைப்பு
அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை ஒன்றிற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மனு தொடர்பாக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
