தொல்பொருள் தளங்கள் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை!
தொல்பொருள் தளங்களை எவரேனும் அழிக்க முற்பட்டால் அவர்களுக்கு எதிராகத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
அந்த தண்டனை போதுமானது அல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் அச்சட்டங்களைத் திருத்துவதற்கு எமக்கு முடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
131வது தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது ஜனாதிபதி தொல்பொருள் தளங்களை பாதுகாக்க இரவு பகலாகப் பாடுபடும் தலைவராவார். அவர் அவ்விடங்களுக்குச் சென்று அவ்விடங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அதற்காக ஜனாதிபதி செயலணியொன்றையும் நிறுவியுள்ளார். அதற்கமையவே முஹுது மகா விகாரை போன்று பாதுகாக்கப்பட வேண்டிய தளங்கள் இந்தளவிற்கேனும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
அந்த வரலாற்று இடங்கள் தேசிய மரபுரிமையாகும். ஒரு இனத்திற்கும் ஒரு மதத்திற்கும் உரித்தானவை அல்ல. இந்நாட்டின் உரிமையாகும்.
எனவே இவ்விடங்களைப் பாதுகாக்கும்போது இனம், மதம் என பேதங்களை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. தொல்பொருள் தளங்களை எவரேனும் அழிக்க முற்பட்டால் அவர்களுக்கு எதிராகத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
அந்த தண்டனை போதுமானது அல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் அச்சட்டங்களைத் திருத்துவதற்கு எமக்கு முடியும்.
யுனெஸ்கோவினால் பெயரிடப்பட்ட 890 உலக பாரம்பரியங்களில் 7 எமது நாட்டின் மரபுரிமைகளாகும். சிகிரியா, அனுராதபுரம், பொலனறுவை, கண்டி, தம்புள்ளை, காலி கோட்டை ஆகிய ஆறு தொல்பொருள் தளங்களும் அதில் உள்ளடங்கும். சிங்கராஜவே ஏழாவதாகும்.
கிழக்கு மாகாணம் என்பது பல தொல்பொருள் தளங்களைக் கொண்ட இடமாகும். சேருவில, முஹுது மகா விகாரை, கிரிகடுசேய, லங்காபடுன, கோணேஸ்வரம் போன்ற வரலாற்று இடங்கள் பல அங்குள்ளன.
ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அந்த இடங்கள் நீண்ட காலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. சில சமயங்களில், நாட்டை ஆட்சி செய்தவர்கள் கூட அவை அழிக்கப்படும் வரை காத்திருந்தனர். தொல்பொருள் தளங்களை என்ன செய்வது என்று அவர்கள் கேட்ட ஒரு காலம் இருந்தது. நினைவுச்சின்னங்கள் கொன்கிரீட் இடப்பட்டு மூடப்பட்டிருந்தன. அவை குறித்து புதிதாகக் கூற வேண்டியதில்லை.
ஆனால் மக்கள் இவற்றை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். இந்த மரபுரிமையை பாதுகாப்பவர்கள் அனைவரும் நம் தாய்நாட்டின் பெருமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கின்றனர்.
அவர்கள் போருக்குச் சென்ற போர்வீரர்களைப் போலவே, எதிர்கால சந்ததியினருக்காக நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்க முயல்கின்றனர். இன்று, தொல்பொருளியல் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் அடிப்படையில் மனித ரீதியாக வளர்ந்த அறிவியல் பாடமாக மாறியுள்ளது.
எனவே, கடந்த காலத்திலிருந்து பெறப்பட்ட அறிவை நிகழ்காலத்திற்காகப் பயன்படுத்துவது அவசியம். இறுதியாக, இலங்கையின் மரபுரிமை தொடர்பான புரிந்துணர்வுள்ள எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
எனவே நீங்கள் அனைவரும் ஒன்றாகச் செய்து வரும் சிறந்த பணிகளுக்கு ஒரு அரசாங்கமாக நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றேன் என தெரிவித்துள்ளார்.