விடுதலைப் புலிகளின் தலைவரை நேரில் சந்திக்கப் போவதாக கூறிய மகிந்த! பொன்சேகாவின் தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப் போவதாக கூறினார். விடுதலை புலிகள் அமைப்புக்கு மகிந்த ராஜபக்ச மீது வைராக்கியம் இருக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருததுத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாங்கள் போரிடவில்லையா..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
யுத்த காலத்திலும் மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படவில்லை. பயங்கரவாதிகள் எவரும் மகிந்த ராஜபக்சவை படுகொலை செய்யவும், குண்டுத்தாக்குதல்களை நடத்தவும் முயற்சிக்கவில்லை. இவர் தனியாக சென்றா யுத்தக் களத்தில் போரிட்டார். நாங்கள் போரிடவில்லையா.
யுத்தத்துக்கு கட்டளை பிறப்பித்த இராணுவ தளபதியான எனது பாதுகாப்பு 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் முழுமையாக நீக்கப்பட்டது. அப்போது எமக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லையா, என்னை வெலிகடை சிறைச்சாலையில் அடைத்த போது அங்கும் விடுதலை புலிகள் அமைப்பினர் இருந்தனர்.
பயங்கரவாதிகளுடன் இருந்த எனக்கு சிறைச்சாலையில் மேலதிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டதா, சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது என்னை படுகொலை செய்வதற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஸ் என்ற பயங்கரவாதி என் அருகில் அமர்ந்திருந்தார்.
மகிந்தவுக்கு அச்சுறுத்தல் இல்லை..
மகிந்த ராஜபக்சவின் மீது பயங்கரவாதிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தமாட்டார்கள். 2005 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மகிந்த ராஜபக்ச 'பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்'என்று குறிப்பிட்டிருந்தார். யுத்தத்தை அனுமதிக்க போவதில்லை. யுத்தம் தீர்வல்ல என்று மகிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டது.
விடுதலை புலிகள் அமைப்புக்கு மகிந்த ராஜபக்ச மீது வைராக்கியம் இருக்கவில்லை. 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக நிதியளிக்கப்பட்டது. ஆகவே மகிந்தவுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.
ட்ரோனர் கருவி ஊடாக மகிந்த ராஜபக்ச மீது தாக்குதல் நடத்துவதற்கு எவருக்கும் பைத்தியம் கிடையாது. ஏனெனில் மிக் விமானத்தை காட்டிலும் ட்ரோனர் கருவி ஊடாக தாக்குதலுக்கு அதிக நிதி செலவாகும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பிரபுக்கள் பட்டியலில் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உள்ளார். ஆகவே அவருக்கு 30 பொலிஸார் பாதுகாப்பு வழங்குவது போதுமானதாக அமையும் என குறப்பிட்டுள்ளார்.