நான் எப்போதும் பாலஸ்தீன மக்கள் பக்கமே: தூதுவருடனான சந்திப்பில் மகிந்த தெரிவிப்பு
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதரகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பாலஸ்தீன மக்களுடன் ஐக்கியமாக நிற்கும் முகமாக இன்று(16.10.2023) இலங்கைக்கான அந்நாட்டு தூதுவருடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, உலகில் எங்கும் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்றும், போர் என்பது தீர்வு அல்ல என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்துக்கான ஆதரவு
குறித்த கலந்துரையாடலில், போர் தொடர்பான இலங்கையின் அனுபவங்களைக் குறிப்பிட்ட மகிந்த, சமாதானத்தின் அவசரத்தை வலியுறுத்தியுள்ளார்.
மகிந்த, ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலும் இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கான ஆதரவையே வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், பத்து இலட்சம் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியையும் மகிந்த 2014ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அந்நாட்டுக்கு வழங்கியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச வீதி
இந்நிலையில், பாலஸ்தீனத்தின் நீண்டகால ஆதரவாளராக மகிந்த இருந்து வருவதோடு அந்நாட்டின் கூட்டொருமைப்பாட்டுக்கான இலங்கை சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகவும் அவர் செயற்படுகின்றார்.
இதற்கமைய பாலஸ்தீனத்தை ஒரு நாடாக1988ஆம் ஆண்டு இலங்கை அங்கீகரித்ததுடன் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்நாட்டில் ‘மகிந்த ராஜபக்ச வீதி’ என ஒரு வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.